நெல்லை ஊராட்சி செயலர் படுகொலையை கண்டித்து விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி செயலர்கள் ஆர்ப்பாட்டம்!
நேற்று முன்தினம் (03.02.2025) திங்கள் கிழமை திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள வேப்பிலாங்குளம் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வந்த சங்கர் என்பவர் பணிக்கு சென்று கொண்டிருந்த போது பட்டப்பகலில் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளதோடு கிராம செயலர்கள், விஏஓ-க்கள் உட்பட அனைத்து அரசு அதிகாரிகளிடமும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. வேப்பிலங்குளம் ஊராட்சி செயலர் சங்கர் படுகொலையை கண்டித்தும், கொலை செய்த குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் கிராம செயலர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விளாத்திகுளம் மற்றும் புதூர் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஊராட்சி செயலர்கள், பணிக்கு சென்று கொண்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்ட சங்கரின் கொலைக்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.