சிப்காட் தொழிற்பூங்காவிற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு - தமிழக அரசு மறு பரீசிலனை செய்ய வலியுறுத்தி விளாத்திகுளம் அருகே கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்!

 

 

 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வெம்பூர், கீழக்கரந்தை, மேலக்கரந்தை, பட்டித்தேவன்பட்டி ஆகிய சுமார் 2,700 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கும் பணியை அரசு துவக்கியுள்ளது. நில எடுப்பு தொடர்பாக நேற்று தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடக்கத்தில் இருந்தே இப்பகுதி விவசாயிகள் விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வெம்பூரில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டம் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் வெம்பூர் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்துவதை  தமிழக அரசு மறு பரீசிலனை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அக்கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வெம்பூர் பகுதியில் பிரதான தொழிலாக இருப்பது வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு தான். வெம்பூர் ஆடு உலக புகழ் பெற்றது. இந்த சூழ்நிலையில் வெம்பூர் பகுதியில் மட்டும் 1349 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதால் இக்கிராம மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும் என்பதால் ஊரை விட்டு காலி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றும், அரசு கைவிட வேண்டும், இதனை கண்டித்து வரும் வெள்ளிக்கிழமை ஊரை காலி செய்து வேறு பகுதியில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள்  மற்றும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.