விளாத்திகுளம் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு - கருத்து கேட்பு கூட்டத்தில் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வெம்பூர், மேலக்கரந்தை, கீழக்கரந்தை, இராமசாமிபட்டி, பட்டித்தேவன்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் சுமார் 2700 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. விவசாய நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்
இந்த நிலையில் சிப்காட் அமைப்பது தொடர்பாக எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த விவசாயிகள் காவல்துறையினர் சோதனைக்கு பிறகு தான் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
தாலுகா அலுவலகத்திற்கு வந்த மக்கள் விவசாயிகள் சிப்காட் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், சிப்காட் அமைத்தால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலில் பாதிக்கப்படும் , தங்களது நீர் நிலைகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும் நிலை இருப்பதால், விவசாய நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைக்கும் முடிவினை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், கைவிட வலியுறுத்தியும் கண்ட கோஷங்களை எழுப்பினர்
இதனை தொடர்ந்து சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். உங்களது கோரிக்கைகளை கருத்து கேட்பு கூட்டத்தில் கூறுங்கள், உங்களது கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார்.இதையடுத்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு சிப்காட் வேண்டாம் என்று ஒருமித்த குரலில் கூறினார். மேலும் தங்களது கோரிக்கை மனுவினையும் வழங்கினர்.
அப்போது விவசாயி ஒருவர் உங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் சிப்காட் வேண்டாம் என்று கூறி சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி காலில் விழுந்து வணங்கினார், இதனைப் பார்த்த மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, விவசாயிகள் இது போன்ற செய்தி ஈடுபடக்கூடாது. உங்கள் கருத்துக்கள், உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கிறோம், உங்கள் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார்.
வெம்பூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் திருப்பதி கூறுகையில் சிப்காட் வேண்டாம் என்று எங்களது எதிர்ப்பை கருத்து கேட்பு கூட்டத்தில் தெரிவித்துள்ளோம். அதிகாரிகளும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர். இதை மீறியும் பணிகள் நடைபெற்றால் விவசாயிகள் மற்றும் மக்களைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றார் .