காதணி விழாவில் கறி விருந்து வைப்பதில்  ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டி படுகொலை - 2 பேர் தப்பியோட்டம்...!



தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த ஊர் காலன் என்பவரின் மகன் பெரியநாயகம் (33) இன்று தனது உறவினரான கவர்ணகிரியைச் சேர்ந்த செந்தூர்க்கனி என்பவரது இல்ல காதணி விழா நிகழ்ச்சிக்காக இருக்கன்குடி சென்றுள்ளார். அங்கு சென்ற பெரியநாயகம் மிகுந்த மதுபோதையில் அவர்கள் சென்ற வாகனத்திலேயே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது உறவினர்கள் அவருக்கென ஒரு தட்டில் உணவு எடுத்துச் சென்றுள்ளனர். இதனைப் பார்த்த அவரது உறவினர்கள் முனியசாமி என்பவர் உட்பட சிலர்.., "நாங்கள் மட்டும் காத்துக் கொண்டிருக்க வேண்டும்... அவருக்கு மட்டும் என்ன தனியா சாப்பாடு.." எனக்கூறி காதணி விழா நிகழ்ச்சியில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்திவிட்டு அனைவரும் ஊருக்கு புறப்பட்டுள்ளனர். செல்லும் வழியில் கீழ ஈராலில் உள்ள டீக்கடை ஒன்றில் அனைவரும் டீ குடித்துக் கொண்டிருந்தபோது, நிகழ்ச்சியில் பிரச்சனையில் ஈடுபட்ட முனியசாமி மற்றும் அவரது உறவினர் ஒருவர் என இருவரும் சேர்ந்து மது போதையில் வாகனத்தில் இருந்த பெரியநாயகத்தை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த எட்டையபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகொலை செய்யப்பட்ட பெரிய நாயகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை செய்த இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.



மேலும், காதணி விழா நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு காரணமாக தான் பெரியநாயகம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் முன்விரோதம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் தங்களது விசாரணைதொடங்கியுள்ளனர்.