சென்னை to கன்னியாகுமரி ECR சாலையில், விளாத்திகுளம் அருகே கரைபுரண்டோடிய காட்டாற்று வெள்ளம் : அப்பளம் போல நொறுங்கி கிடக்கும் சாலைகள் : போக்குவரத்து முற்றிலுமாக துண்டிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய தொடர் கனமழையின் காரணமாக விளாத்திகுளம் பகுதிகளில் உள்ள அனைத்து கண்மாய்களும் நிரம்பி பல கிராமங்களில் தன்மாய் கரைகள் உடைந்து ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தினால் குடியிருப்புகள் தண்ணீரில் தத்தளித்தன. அதேபோன்று சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் மிக நீண்ட தூரம் கொண்ட கிழக்கு கடற்கரை சாலையில்(ECR) தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அமைந்துள்ள வேப்பிலோடையில் அதிவேகத்தில் கரைபுரண்டோடிய காட்டாற்று வெள்ளத்தினால் ECR சாலை இருந்த தடமே தெரியாமல் அடித்துச் சென்றதில், கிட்டத்தட்ட 300 மீட்டர் அளவிலான சாலை அப்பளம் போல சிறுசிறு துண்டுகளாக நொறுங்கி சிதறிக்கிடக்கிறது. இதனால் இந்த ECR சாலையில் நாள் ஒன்றுக்கு கன்னியாகுமரி, இராமேஸ்வரம், தனுஷ்கோடி போன்ற சுற்றுலா பகுதிகளுக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் முதல் தொழில் நிறுவனங்கள் சரக்கு வாகனங்கள் வரை அனைத்து போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, இந்த ECR சாலையில் அமைந்துள்ள வேப்பிலோடை கிராமத்தைச் சேர்ந்த மக்களின் நிலைதான் தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளது... இந்த கிராமத்தின் தொடக்கம் - முடிவு என இரண்டு இடங்களில் ECR சாலைத் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதால், இக்கிராமத்திலுள்ள 5000க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குடிநீர், பால், உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கும் கூட கிராமத்தை விட்டு வெளியே செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர். மேலும் காட்டாற்று வெள்ளத்தினால் அங்குள்ள அரசு  சுகாதார நிலையம், குடியிருப்புகள் என ஒட்டுமொத்த கிராமமே வெள்ளத்தில் மூழ்கியதால் துண்டிக்கப்பட்ட மின்சாரம் தற்போது வரை வழங்க எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, கிராமத்திலிருந்து எந்தப் பகுதிக்கும் செல்ல முடியாதவாறு இரு புறங்களிலும் சாலை துண்டிப்பு ஏற்பட்டுள்ளதால் வெளியூர்களில் இருந்து இக்கிராமத்திற்கு வந்திருந்தவர்களும் தங்களது பகுதிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். 

இந்த ECR சாலையில் சாலையில் தற்போது சாலை முற்றிலுமாக பெயர்ந்த பகுதிக்கு இரு புறமும் பாலம் அமைந்திருக்க கூடிய நிலையில், காட்டாற்று வெள்ளம் பாலத்தின் வழியாக செல்லாமல் சாலையை அடித்துச் செல்லப்பட்டிருப்பதற்கான காரணம் பாலம் சரியான இடத்தில் முறையாக அமைக்கப்படவில்லை என்றும், நீர்வரத்து ஓடைகளில் ஆக்கிரமிப்பு செய்து உப்பளம் அமைத்துள்ள சில தனியார் உப்பள உரிமையாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு உப்பளங்கள் பாதிக்காதவாறு தண்ணீர் செல்வதற்கு பாலம் கட்டப்பட்டுள்ளதால்தான் தற்போது இந்த சாலை முற்றிலுமாக அடியோடு பெயர்ந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, 4 நாட்களாக மிக முக்கியமான கிழக்கு கடற்கரை சாலை இந்தளவு மோசமான நிலையில் இருந்தும் இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், விளாத்திகுளத்தில் இருந்து தூத்துக்குடிக்கு இவ்வழித்தடத்தில் செல்லக்கூடிய பேருந்துகள் தற்போது வரை இயக்கப்படவில்லை, விளாத்திகுளத்திலிருந்து - தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் செல்வதிலும் கூட முடியாத காரணத்தால், மேல்சிகிச்சைக்காக நோயாளிகள் தற்போது கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றனர். ஆகையால் இந்த ECR சாலையின் முக்கியத்துவம் கருதி இதனை உடனடியாக போர்க்கால அடிப்படையில் இச்சாலையை சரி செய்து போக்குவரத்து வழக்கம்போல இயங்குவதற்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.