"எப்பவுமே 'தமிழச்சி' என்று பேசும் நிர்மலா சீதாராமன் காழ்புணர்ச்சியோடு தமிழ்நாட்டுக்கு நிதியே ஒதுக்கவில்லை : தமிழ் மொழிக்கு 2 இலக்கத்தில் நிதி... சமஸ்கிருதத்திற்கு ரூ.1300 கோடி நிதியா?" - விளாத்திகுளத்தில், அமைச்சர் கீதா ஜீவன் காட்டம்..!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் "நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கான கலந்து கொண்டனர்.
விளாத்திகுளத்தில் நடைபெற்ற இந்த கண்டனப் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது;
• இதுவரைக்கும் நடந்த பட்ஜெட்டில் நடக்காத ஒரு நிகழ்வு.. இந்த பட்ஜெட்டில் காழ்புணர்ச்சியோடு, எப்பவுமே தமிழச்சி என்று பேசும் நிர்மலா சீதாராமன் நம்ம ஊருக்கு ஒண்ணுமே கொடுக்கவில்லை.
• தமிழ் மொழி முன்னேற்றத்திற்கு 2 இலக்கத்தில் நிதி ஒதுக்கீடு ஆனால் சமஸ்கிருதத்திற்கு ரூ.1300 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்... இந்த அளவிற்கு நம்மை ஒடுக்கினாலும் நாம் மோடி அரசுக்கு தகுந்த பாடம் கற்பித்து விடுவோம்.
• பட்ஜெட்டில், நிர்மலா சீதாராமன் பெயருக்கு ஒரே ஒரு திருக்குறளை மட்டும் சொல்லி இருக்காங்க... தமிழகத்திற்கு எந்தவொரு நிதி ஒதுக்கீடும் இல்லை!
• அவங்க (மத்திய அரசு) அறிவித்த மெட்ரோ திட்டத்திற்கும், 100 நாள் வேலை திட்டத்திற்கும் அவர்கள் நிதி ஒதுக்கவில்லை.
• பொருளாதார அறிக்கையிலும், நிதி ஆயோக்-ன் அறிக்கையிலும் மட்டும் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது, முதன்மை மாநிலமாக இருக்கின்றது என்று அதை மட்டும்தான் சொல்கிறார்கள்... ஆனால் எந்த நிதி ஒதுக்கப்படவில்லை.
• மதுரையில் 2015ல் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு அவர்கள்தான் அடிக்கல் நாட்டினார்கள், ஆனா அதுக்கும் நிதி இல்லை...
• கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், பண முதலைகளுக்கும் ரூ.25 லட்சம் கோடி தள்ளுபடி செய்வதற்கு இந்த மத்திய அரசு... ஆனால் நம்ம ஊரைச் சேர்ந்த கல்வி கடன் வாங்கிய மாணவர்களுக்கும், விவசாயக் கடன் வாங்கி விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்யவில்லை.
• மத்திய அரசு ED, IT , என எதைக் கொண்டு மிரட்டினாலும் திமுக அஞ்சப் போவதில்லை...
• வடிவேலுவின் "அது வேற வாய்.. இது நாறவாய்..." நகைச்சுவை போல இன்றைக்கு ஒருத்தர் (சீமான்) பேசிக் கொண்டிருக்கிறார்... ஒரு நாள் பெரியாரை மிகவும் தூக்கி வைத்து பேசியிருக்கிறார்.. இன்றைக்கு அப்படியே உள்ட்டவாக பேசுகிறார், ஏனென்றால் ஒன்றிய அரசுக்கு B டீம் ஆகிவிட்டார்கள்..
• இன்றைக்கு ஈரோடு கிழக்குத் தேர்தலில் நம்மோடு போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்திருக்கிறார்கள்..
• தியேட்டரில் மூடி இல்லாமல் இருக்கும் பாப்கார்ன்-க்கு 5% GST, கடைகளில் மூடி போட்டு விற்கும் பாப்கார்ன்-க்கு 12% GST, இனிப்பு சேர்த்து விற்கும் சாக்லேட் பாப்கார்ன்-க்கு 18% GST என்பதைப் போல எங்கெல்லாம் வரி போட்டு நம் இரத்தத்தை உறிஞ்சலாம் என்று நிர்மலா சீதாராமன் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்.. ஏழை எளிய மக்களை நசுக்க கூடிய அளவிற்கு வரிப்போட்டு கொண்டிருக்கிறார்கள்.... என்று மத்திய அரசையும், மத்திய நீதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.