விளாத்திகுளம் அருகே "பஸ் பாஸ் தான் இருக்கு... ஆன‌ பஸ்ஸே இல்லை..." : கீழ ஈராலில் தேமுதிகவினருடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்!




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ ஈரால் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்த 200-க்கும் அதிகமான பள்ளி கல்லூரி மாணவர்கள் எட்டையபுரத்தில் அமைந்துள்ள பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வருகின்றனர். இவர்கள் முறையான பேருந்து வசதி இல்லாத காரணத்தால், கீழ ஈரால் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் தினசரி பேருந்துக்காக மணிக்கணக்காக காத்திருக்கும் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கென தமிழ்நாடு அரசு சார்பில் இலவச போக்குவரத்து பயண அட்டை வழங்கியும், சில அரசு பேருந்துகளில் மட்டுமே மாணவர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்படுவதாகவும், பல அரசு பேருந்துகளில் மாணவர்களிடமும் டிக்கெட்டுக்கு ரூ.10 முதல் ரூ.15 பணம் வாங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது. இதனால் பஸ் பாஸ் கொடுத்தும் தங்களுக்கு எந்தவித பயனில்லை என்று மாணவர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமன்றி, காலை மற்றும் மாலை என இருவேளைகளிலுமே பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதுமான பேருந்து வசதி இல்லாததால் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் டிக்கெட்டுக்கு பணம் கொடுத்தும் படியில் தொங்கிக்கொண்டு செல்லும் ஆபத்தான சூழ்நிலையில் தான் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இது குறித்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பலமுறை போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை என்று கூறுகின்றனர். இதனால் இன்று கீழ ஈரால் தேசிய நெடுஞ்சாலையில் தேமுதிக மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் பள்ளி மாணவர்கள் மற்றும் கட்சியினர் ஏராளமானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உடனடியாக பள்ளி மாணவர்களின் நலன் கருதி உரிய போக்குவரத்து வசதி செய்து தரப்படாவிட்டால் மிகப்பெரிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.