விளாத்திகுளம் அருகே மகனின் திருமண விழாவை முன்னிட்டு மாட்டு வண்டிகள் பந்தயம் நடத்திய மாட்டு வண்டி பந்தய வீரர் : "மாட்டு வண்டி பந்தயத்தின் மீது தீராத காதல் " !



தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாட்டு வண்டி ரேக்ளா பந்தயம் நடைபெறுவது வழக்கம், அதிலும் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் அதிக அளவில் மாட்டு வண்டி எல்கைபந்தயம் வழக்கமாக நடைபெறுவது ஒன்று, விளாத்திகுளம் பகுதிகளில் கோவில் திருவிழாக்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டியில் எல்கை பந்தயம் நடைபெறுவது வழக்கம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் மட்டும் கடந்த ஒரு வருடத்திற்கு 200-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பந்தயம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.



இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள விருசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகசாமி என்பவர் தனது இளம் வயதில் இருந்து மாட்டு வண்டிகள் பந்தயத்தின் மீது "தீராத காதல்" கொண்டுள்ளார், இதனால் விளாத்திகுளம் பகுதிகளில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகளில் மாட்டு வண்டி பந்தயத்தில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார், இந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு தனது மூத்த மகன் முத்துப்பாண்டி என்பவரின் திருமணத்தை முன்னிட்டு மாட்டு வண்டிகள் பந்தயம் நடத்தி அசத்தினார், அதேபோல் கடந்த ஆகஸ்ட் 28- ம் தேதி நடைபெற்ற தனது இளைய மகனான முரளி என்பவரின் திருமண விழாவை முன்னிட்டு இன்று விருசம்பட்டி கிராமத்தில் மாபெரும் மாட்டுவண்டிகள் பந்தயம் நடத்தினார், பூஞ்சிட்டு,தேஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் தூத்துக்குடி,ராமநாதபுரம், திருநெல்வேலி,மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 29 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன, போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் ஒட்டி வந்த சாரதி பின்சாரதிகளுக்கு பரிசுத்தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டது, அதேபோல் மாட்டுவண்டி பந்தயத்தை காண வந்த பொதுமக்கள், ஓட்டி வந்த சாரதி என அனைவருக்கும் அசைவ அன்னதானம் வழங்கி ஆறுமுகசாமி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.