விளாத்திகுளம் அருகே "இங்க வச்சு தண்ணிலாம் அடிக்க கூடாது... வீட்டுக்கு போங்க..." - பெண்களுக்கு இடையூறாக பொது இடத்தில் மது அருந்தியவர்களை கண்டித்த S.I மீது தாக்குதல் நடத்தி பைக் சாவியை பறித்த குடிகார பாய்ஸ்...!


வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 4 பேரை கைது செய்து சிறையிலடைத்த போலீசார்!


 


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வெம்பூரில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பொது இடத்தில் அமர்ந்து அக்கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் மது குடித்துக்கொண்டு அவ்வழியாக இயற்கை உபாதைகள் கழிக்கச் செல்லும் பெண்களை கேலி செய்தும், செல்போன் லைட் அடித்தும் தொந்தரவு கொடுத்து வருதாக மாசார்பட்டி காவல் நிலையத்திற்கு புகார் வந்துள்ளது. இப்புகார் குறித்து நேரில் சென்று பார்ப்பதற்காக மாசார்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் முகேஷ் அரவிந்த் மற்றும் காவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது வெம்பூரில் உள்ள தெருக்குழாய் அருகில் பொது இடத்தில் வைத்து அதே கிராமத்தை சேர்ந்த உதயகுமார் (30), மகேஸ்வரன் (30), இராமகிருஷ்ணன் (24), கருப்பசாமி (21), பாண்டி மற்றும் ராசுக்குட்டி ஆகிய 6 இளைஞர்கள் மது அருந்திக்கொண்டிருந்தனர். இதனைக் கண்ட உதவி ஆய்வாளர் அங்கு சென்று மது அருந்தி கொண்டிருந்தவர்களை பார்த்து, "இங்க வச்சு தண்ணிலாம் அடிக்க கூடாது... வீட்டுக்கு போங்க..." என்று எச்சரித்து வீட்டிற்கு செல்லும்படி அறிவுறுத்திவிட்டு அருகில் உள்ள கிராமத்திற்கு ரோந்துப்பணிக்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வெம்பூரின் வழியாக காவல்துறையினர் ரோந்து வந்துகொண்டிருந்த போது, அங்கு மது குடித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் வீட்டிற்கு செல்லாமல் அங்கேயே அமர்ந்திருப்பதைக் கண்டு "இன்னும் நீங்க போகலையா... வீட்டுக்கு போறீங்களா? இல்லனா காவல் நிலையம் அழைத்து செல்லவா?" என மீண்டும் அவர்களை வீட்டிற்குச் செல்லும்படி காவல்துறையினர் கண்டித்துள்ளனர்.


ஆனால், மது போதை தலைக்கேறியதில் 

அந்த இளைஞர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு சீருடை அணிந்து பணியில் இருந்த மாசார்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் முகேஷ் அரவிந்தின் சட்டையை பிடித்து அவரை கீழே தள்ளி விட்டு ஆபாசமாக திட்டியுள்ளனர். இதனால் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் போதை இளைஞர்களை கைது செய்ய முற்பட்ட போது, குடிகார இளைஞர்கள் அப்பகுதியில் இருந்த தங்களது உறவினர்களை வரவழைத்து காவல்துறையினரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு போலீசார் தங்களை தாக்கியதாக பொய் நாடகம் போட்டுள்ளனர். பின்னர் கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள் வந்து காவல்துறை துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் அந்த போதை இளைஞர்கள் மீது தான் தவறு என்பதை அறிந்து போலீசாரிடம் வருத்தம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்து புறப்படுவதற்காக பைக் எடுக்க சென்றபோது உதவி ஆய்வாளர் முகேஷ் அரவிந்த்தின் பைக் சாவியை அந்த போதை ஆசாமிகள் எடுத்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் நீண்ட நேரமாக பைக் சாவியை 

கேட்டு காவல்துறையினர் நின்று கொண்டிருந்த போதும் சாவியை எடுத்து வைத்துக்கொண்டு போக்கு காட்டியுள்ளனர் அந்த போதை இளைஞர்கள். இதையடுத்து எஸ்.ஐ முகேஷ் அரவிந்த் தனது வீட்டிலிருந்த மற்றொரு பைக் சாவியை எடுத்து வந்து தனது பைக்கை எடுத்துச் சென்றுள்ளார். 



இந்த நிலையில் வெம்பூரில் போதை ஆசாமிகள் ரோந்து சென்ற மாசார்பட்டி காவல் நிலைய போலீசாரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில், பணியில் இருந்த போலீசாரை தாக்கியது மற்றும் பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வெம்பூரைச் சேர்ந்த உதயகுமார் (30), மகேஸ்வரன் (30), இராமகிருஷ்ணன் (24), கருப்பசாமி (21) ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டு தற்போது பேராவூரணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, இதில் தொடர்புடைய  பாண்டி மற்றும் ராசுக்குட்டி ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


மேலும் பெண்களுக்கு இடையூறாக பொது இடத்தில் மது அருந்து கொண்டிருந்த இளைஞர்களை கண்டித்த போலீசார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.