விளாத்திகுளம் அருகே ரூபாய் 3,44,000/- மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டு வைத்திருந்தவர் கைது!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் காவல் நிலைய போலீசார் (23.01.2026) காலை ரோந்து பணியில் ஈடுபட்ட போது புதூர் பகுதியில் உள்ள முருகன் (55) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையை சோதனை செய்ததில் அங்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சட்டவிரோத விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மேலும் புகையிலை பொருட்கள் குறித்து அவரது வீட்டை சோதனை செய்ததில் அங்கு சந்தேகத்திற்கிடமாக இருந்த பண்டல்களை சோதனை செய்ததில் அதில் மொத்தம் ரூபாய் 3,44,000/- மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டு கட்டுகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. 


இதுகுறித்து புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து மேற்படி முருகன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 500 ரூபாய் கள்ள நோட்டு கட்டுகள் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேற்படி துரித விசாரணை மேற்கொண்டு எதிரியை கைது செய்து கள்ளநோட்டுகள் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து சிறப்பாக பணியாற்றிய புதூர் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்று சட்டவிரோதமாக கள்ளநோட்டு தயாரித்தல் மற்றும் கள்ளநோட்டு பரிமாற்றத்தில் ஈடுபடுவர்கள், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தூத்துக்குடி  மாவட்ட  காவல் கண்காணிப்பாளர்  நை.சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.