எட்டயபுரம் அருகே  பாதையில் பள்ளம் ஏற்படுத்தி 3000 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாதிப்பு  - விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் பரிதவிப்பு!


கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து கண்களில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தர்ணா போராட்டம் – பரபரப்பு!



தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம்  அருகே உள்ளது குளத்துவாய்பட்டி கிராமம். இந்த கிராமத்தின் அருகே  இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாம் அருகேயுள்ள பாதை வழியாக தான் குளத்துவாய்பட்டி பகுதி கிராம மக்கள் தங்களது விவசாய நிலங்களுக்கு சென்று வந்தனர். ஆண்டாண்டு காலமாக அந்த பாதை வழியாக விவசாயிகள்  சென்று வந்த நிலையில், சில தனிநபர்கள் அந்த பாதை தங்களுக்கு சொந்தமானது என்று கூறி   சாலையில் பள்ளம் தோண்டி தடுத்து நிறுத்தியதால்  அப்பகுதியில் உள்ள சுமார் 3000 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பு கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கோரி கிராம மக்கள்  கண்களில் கருப்பு துணி கட்டி  கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஊரிலிருந்து ஊர்வலமாக சென்று  தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தை மூடி  போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் கிடைத்ததும்  வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது அந்த வழியாக விவசாயிகள் செல்வதற்கு  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து  பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

கடந்த இரண்டு வருடங்களாக இந்த பிரச்சனை இருப்பதாகவும், நாங்கள் போராட்டம் நடத்துவதும், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதும்  வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்த பாதையில் எவ்வித இடையூறு இல்லாமல் விவசாயிகள் சென்று வர வேண்டும் , அந்தப் பாதையில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்  தங்களுடைய ஆதார் ரேஷன் கார்டுகளை அரசிடம் ஒப்படைப்பது மட்டுமின்றி வரும் தேர்தலை புறக்கணிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.