விளாத்திகுளத்தில் பரபரப்பான சூழலில் போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற நாசரேத் திருமண்டலத் தேர்தல்...!




தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம்,கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் திருநெல்வேலி திருமண்டலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, மிகப்பெரிய திருமண்டலமாக செயல்பட்டு வருகிறது. அவ்வாறு தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் ஒரு பகுதியான ஆற்றங்கரை சேகரத்தன் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சேகர உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க கடந்த நவம்பர் 9ஆம் தேதி அந்தந்த தேவாலயங்களில் வாக்குப்பதிவுகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து அன்றைய தினம் மாலையில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் பெருமன்ற உறுப்பினர்களாக  ஸ்டீபன் அணியைச் சேர்ந்த ஏனோக் மற்றும் கனக ரத்தினராஜ் ஆகியோர் தங்களை எதிர்த்து போட்டியிட்ட ஆபிரகாம் சுந்தர் மற்றும் அற்புதராஜ் ஆகியோர் பெற்ற வாக்குகளை விட அதிகமாக பெற்று வெற்றி பெற்றனர். இந்நிலையில் ஆற்றங்கரை சேகரத்திற்கு நிர்வாகக்குழு அமைப்பதற்காக செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு இன்று விளாத்திகுளம் CSI தேவாலயத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற சேகர உறுப்பினர்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த தேர்தல் வரை நேரடி வாக்கு முறை நடைமுறையில் நடைபெற்று வந்த இந்த தேர்தல் இந்தாண்டு மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் முறை அறிவிக்கப்பட்டதால் நம்பகத்தன்மை இருக்காது எனக் கூறி இப்பதவிகளுக்கு போட்டியிட்ட இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டமான சூழ்நிலை நிலவி வந்தது. பின்னர் தேவாலயத்தின் கதவுகள் பூட்டப்பட்டு, காவல்துறை பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற ஸ்டீபன் அணியை சேர்ந்த சொர்ணராஜ் செயலாளராகவும், அற்புதராஜ் பொருளாளராகவும் வெற்றி பெற்றனர். இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற தரப்பினர் தேவாலயத்தின் முன்பு பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக தங்கள் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.