விளாத்திகுளம் எம்எல்ஏ தலைமையில் 800க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்...!
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மத்திய அரசு வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு சட்டம் என்ற பெயரில் ஒரு மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை திரும்ப பெற வவியுறுத்தி இன்று திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்திருந்தது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமையில் 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய பாஜக அரசையும், அதற்கு ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மற்றும் பொதுமக்கள் என 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.