விளாத்திகுளத்தில், சித்திரை திருவிழாவையொட்டி கோலாகலமாக நடைபெற்ற கோலாட்டம் : சிறுமிகள் முதல் மூதாட்டி வரை சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று குதூகலம்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழாவானது கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி சித்திரை திருவிழாவின் ஒவ்வொரு நாளும் திருக்கோவிலில் நடைபெற்று வரும் சிறப்பு பூஜைகள் மற்றும் சுவாமி அம்பாளின் திருவீதியுலா நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தும், திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் நடைபெற்று வரும் சிறப்பு கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்து வருகின்றனர்.


இதேபோன்று, சித்திரைத் திருவிழாவினை கொண்டாடும் விதமாக திருக்கோவிலின் முன்பாக இன்று மாலை முதல் இரவு வரை சிறுமிகள், இளம் பெண்கள், பெரியவர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று பிரம்மாண்ட கோலாட்டம் நிகழ்ச்சியை அரங்கேற்றினர். இதில் ஒளிர்-வண்ண விளக்குகளின் வெளிச்சத்தில்... மேளதாளம் முழங்க - நாதஸ்வர இசைகளுடன்... கும்மி பாடல்களுக்கு ஏற்ப நடனமாடிய பெண்களின் கோலாட்டம் நிகழ்ச்சியானது பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


சன்னதி தெரு பொதுமக்கள் சார்பாக தொடர்ந்து 8 நாட்களாக கோலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.