விளாத்திகுளம் அருகே சிப்காட் தொழிற்பூங்கா அமைவதை எதிர்த்து 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் : அனைத்துக் கட்சியினர் ஆதரவு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அமைந்துள்ள வெம்பூர், இராமசாமிப்பட்டி, பட்டித்தேவன்பட்டி, கீழக்கரந்தை, மேலக்கரந்தை உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி சுமார் 2700 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு சிப்காட் அமைக்க திட்டமிட்டு அதற்கான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் விவசாய நிலங்களை அழித்து சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வெம்பூரில் வைத்து சுமார் 200-க்கும் அதிகமான விவசாயிகள், கிராம மக்கள் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் விளாத்திகுளம் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இப்பகுதியில் 2700 ஏக்கர் விவசாய நிலங்களை அழித்து சிப்காட் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பதே இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகளின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது....