விளாத்திகுளம் அருகே கிராம சபை கூட்டத்தில் அதிகாரிகளிடம் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்!
தமிழ்நாடு முழுவதும் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நமச்சிவாயபுரம் கிராமத்தில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் வட்டாரத்தைச் சேர்ந்த வருவாய்த்துறை அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள், வேளாண்மை துறை அதிகாரிகள், நீர்வளத் துறை அதிகாரிகள் உட்பட பல்வேறு துறையைச் சேர்ந்த ஏராளமான அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊராட்சி செயலர், கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட நீர்வழிப் பகுதி மேம்பாட்டு முகமை மூலம் நீர்வழிப் பகுதி நிலவரத்தையும் நீர் வளத்தையும் பாதுகாக்க வேண்டி சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் அனைவரும் உறுதி ஏற்று கொண்டனர். அதேபோன்று, தேசிய வாக்காளர் தின உறுதிமொழி மற்றும் தேசிய தொழுநோய் தடுப்பு உறுதிமொழியையும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் உறுதியேற்று கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் கிராம ஊராட்சியில் பொதுமக்களின் சுகாதாரம் குறித்தும், தமிழ்நாடு அரசின் மருத்துவ சேவைகள் பொது மக்களுக்கு சரியாக வழங்கப்படுகின்றதா?, இங்குள்ள எத்தனை சதவீதம் மக்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் உள்ளது?, அவற்றிற்கு மருந்துகள் போதுமானதாக மக்களுக்கு வழங்கப்படுகிறதா? என்பன உள்ளிட்ட மக்களின் சுகாதாரம் குறித்து ஏராளமான கேள்விகளை கேட்டறிந்ததோடு, அங்கிருந்த செவிலியர்களிடம் "மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை" சிறப்பாக செயல்படுத்தும் படி அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து வேளாண்மை துறை மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகளிடமும் ஊராட்சிக்கு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், அரசின் சேவைகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து பதிவேடுகளை பார்வையிட்டார். பின்னர் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த அனைத்து துறை அரசு அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு அரசின் அனைத்து சேவைகளையும் தாமதமின்றி பொது மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார். இதில் வேளாண்மை துணை இயக்குநர் (பொறுப்பு) மலர்விழி, உதவி பொறியாளர் (வேளாண்மை) அன்சாரி, நீர்வடிப்பகுதி அணி உறுப்பினர் சுரேஷ், துணை வட்டாட்சியர் பொன்னம்மாள், வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.