விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சென்று ஆறுதல் கூறி ரூ.4 லட்சம் காசோலை வழங்கினார்.



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வெம்பூர் - ராமசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெரிய முனியாண்டி என்பவரின்  மகன் துரைப்பாண்டி (43 ) ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதியன்று அப்பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்த போது தனது கிராமத்துக் காட்டுப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் பொழுது  திடீரென மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் இன்று தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், எட்டையபுரம் வட்டாட்சியர் சுபா உட்பட அதிகாரிகள் மின்னல் தாக்கி உயிரிழந்த துரைப்பாண்டியின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று அவரது குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறி தமிழக அரசு பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியின் கீழ் ரூ.4 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். மேலும், பணத்தை குழந்தைகளின் பெயரில் வங்கி கணக்கில் வைப்புநிதியாக சேமித்து அவர்களை நல்லமுறையில் படிக்க வைக்கும்படி துரைப்பாண்டியின் குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.