2 மாதங்களாக வட்டாட்சியருக்கே தெரியாமல் நடைபெற்ற கனிமவளக் கொள்ளை: வட்டாட்சியர் வருவதை அறிந்து மண்ணைத்தட்டிவிட்டு ஓட்டம் பிடித்த மணல் மாஃபியா டிராக்டர்கள்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இருந்து எட்டையாபுரம் செல்லும் சாலை சித்தவநாயக்கன்பட்டி விளக்கு அருகே எந்த அனுமதியும் இன்றி கனிமவளக்கொள்ளை நடைபெறுவதாக, பல்வேறு அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் என பலர் புகார் தெரிவித்தனர், சித்தவநாயக்கன்பட்டி விளக்கு பகுதி நீரோட்டம் அதிகம் உள்ள ஓடைப்பகுதி மற்றும் வைப்பாற்று படுகையாகும், இப்பகுதியில் 20 அடிக்கு கீழே தோண்டினால் ஆற்று மணல் உள்ளதை தெரிந்த மணல் மாஃபியாக்கள் இந்த அனுமதியும் இன்றி  ஆற்றுமண் கரம்பைமண் ஆகியவற்றை சட்டவிரோதமாக திருடி வந்துள்ளனர், இதுகுறித்து அந்த மணல் திருட்டில் ஈடுபடும் திமுக நிர்வாகியிடம் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மணல் அள்ளுவதை நிறுத்த சொன்னால், அந்தத் திமுக நிர்வாகி " யாராலும் எங்களை ஒன்னும் செய்ய முடியாது " உன்னால முடிஞ்சத பண்ணிக்கோ என்று மிரட்டி வந்துள்ளார்.


இதனை அடுத்து பாஜகவினர் கடந்த 15-10-2025ம் தேதி அன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் சித்தவநாயக்கன்பட்டி விளக்கு பகுதி அருகே  சட்டவிரோதமாக 20 அடிக்கு மேல் மணல் திருட்டு நடைபெறுவதாகவும், அவ்வாறு நடைபெறும் மணல் திருட்டு காரணமாக புதிதாக பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர் மட்ட பாலம் மழை நீரில் அடித்து செல்லப்படும் சூழ்நிலை ஏற்படும் எனவே மணல் திருட்டை தடுத்து நிறுத்தி, சட்டவிரோதமாக மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனர்.

இந்நிலையில் மணல் திருட்டு குறித்து மனு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, விளாத்திகுளம் வருவாய் ஆய்வாளர் மகேந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று மணல் திருட்டை நிறுத்துமாறு கூறியுள்ளார், அங்கு இருந்த 10-க்கும் மேற்பட்ட குண்டர்கள் வருவாய் ஆய்வாளர் மகேந்திரனை (எல்லாம் மேல வரைக்கும் பேசியாச்சு உங்க வேலை ஏதோ அத பாத்துட்டு போங்க) என்று மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர்.


இந்நிலையில் தற்போது வரை 700 மீட்டர் தூரத்திற்கும் 60 மீட்டர் அகலத்திற்கும் 20 அடி ஆழத்திற்கும் கரம்பை மண்,சவுடுமண்,ஆற்றுமணல் என அனைத்து விதமான கனிம வளங்களும் எந்தவித அனுமதியும் இன்றி  தற்போது வரை திருடப்படுவதாக கூறி, விளாத்திகுளம் வட்டாட்சியர் கண்ணனிடம்பாஜக வடக்கு மாவட்ட செயலாளர் சரவண கிருஷ்ணன் தலைமையில் விளாத்திகுளம் மற்றும் புதூர் பகுதியை சேர்ந்த பாஜகவினர் நாங்கள் சட்டவிரோத மணல் திருட்டு குறித்து ஒரு மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தும் இதுவரை நீங்கள் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை, அரசுக்கு  பல கோடி ரூபாய் வருவாய் இழப்பீடு செய்துகனிமவளத்தை திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், திருட்டில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யவும் கூறி புகார் கூறினர்.


இதற்கு வட்டாட்சியர் கண்ணன் கனிமவள கொள்ளை நடைபெறுவதே தனக்குத்தெரியாது என்றும், நான் சம்பவ இடத்தை ஆய்வு செய்கிறேன் என்று கூறி கனிமவள திருட்டு நடைபெற்ற இடத்தினை வட்டாட்சியர் கண்ணன் மற்றும் விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது இரண்டு மாதங்களாக மணல் திருட்டு நடைபெற்றது உறுதியானது. வட்டாட்சியர் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது ஒரு JCB வாகனம் அடுத்து மணல் அள்ளுவதற்கான முன்னேற்பாடுகளை செய்தது குறிப்பிடத்தக்கதாகும். வட்டாட்சியர் ஆய்வு செய்வதை அறிந்த 10-க்கும் மணல் மாஃபியா டிராக்டர்கள்,மணல் திருட்டு நடைபெற்ற இடத்திலிருந்து மாற்று வழியாக தப்பித்து ஓட்டம் பிடித்தனர். 


அதேபோல் மணல் திருட்டில் ஈடுபடுத்தப்படும் டிராக்டர் வாகனங்கள் ஓட்டும் ஓட்டுநர்களுக்கு முறையான உரிமம் இல்லாமலும்,பள்ளி மாணவர்களை வைத்து டிராக்டர் வாகனங்கள் இயக்கப்படுவதாக இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டதாகவும்  பல புகார்கள் வந்த நிலையிலும் வட்டார  போக்குவரத்து ஆய்வாளர் இதனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகிறது.


எனவே சட்டவிரோதமாக அரசுக்கு வருவாய் இழப்பீடு செய்யும் மணல் மாஃபியாக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விளாத்திகளும் பகுதி விவசாயிகள், பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.