நவராத்திரியின் 7-ம் நாளை முன்னிட்டு விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை: அபிராமியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த மீனாட்சியம்மன்!


உலகம் முழுவதும் நவராத்திரி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது, அதிலும் குறிப்பாக காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது, இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், நவராத்திரியை முன்னிட்டு கொலு வைத்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நவராத்திரியின் 7-ம் நாளை முன்னிட்டு மீனாட்சியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அபிராமியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சிறப்பு நிகழ்வாக அபிராமி பட்டருக்கு அமாவாசையை பெளர்ணமியாக மாற்றி  காட்டிய அதிசியத்தை தத்ரூபமாக கோவில் அர்ச்சகர்கள் பக்தர்களுக்கு செய்து காண்பித்தனர். இதைத்தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்து கோவிலில் வைக்கப்பட்டுள்ள கொலுவை கண்குளிர கண்டு சென்றனர். மேலும், நவராத்திரியின் 7-ம் நாளை பூஜையை முன்னிட்டு கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அருட்பிரசாங்கள் வழங்கப்பட்டது.