14-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விளாத்திகுளத்தில் மாபெரும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி : நாதஸ்வர வாத்தியம், தப்பு தாளங்கள் முழங்க 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு!
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதியன்று "தேசிய வாக்காளர் தினம்" நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதையொட்டி தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளி-கல்லூரி மாணவர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தப்பு தாளங்கள் முழங்க மாபெரும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். அதன்படி, விளாத்திகுளம் ஆற்றுப்பாலத்திலிருந்து துவங்கிய இப்பேரணியை தேர்தல் நடத்தும் அலுவலர் அபுல் காசிம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் விளாத்திகுளம் வட்டாச்சியர் இராமகிருஷ்ணன், தேர்தல் துணை வட்டாட்சியர் பாலமுருகன் தலைமையில் அனைத்து வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு நாதஸ்வர வாத்தியம், தப்பு தாளங்கள் முழங்க நடைபெற்ற இப்பேரணியானது எட்டையபுரம் ரோடு, பேருந்து நிலையம், மதுரை ரோடு, கீழரத வீதி, காய்கறி மார்க்கெட் வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவுற்றது. மேலும் இப்பேரணியில் மாணவர்கள் வாக்களிப்பதன் அவசியம் பற்றியும், வாக்குரிமை என வாக்காளர்கள் விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை வழிநெடுகிலும் இருந்த பொதுமக்களுக்கு வழங்கியும், கோஷமிட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.