விளாத்திகுளம் அருகே மூதாட்டிக்கு விபூதி போட்டு செல்போன் திருடிய “மாவீரன்” IMEI நம்பர் மூலம் கைது!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன்பொம்மையாபுரம் கிராமத்தை சேர்ந்த குருபாக்கியம்(64) என்ற மூதாட்டியின் வீட்டிலிருந்த ஆன்ட்ராய்டு செல்போன் கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி காணாமல் போயுள்ளது. இதுகுறித்து மூதாட்டி குருபாக்கியம் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் செல்போனில் உள்ள IMEI நம்பரை வைத்து சைபர் கிரைம் துறை மூலம் சோதனை செய்தபோது, மூதாட்டியின் செல்போன் நாகலாபுரத்தில் உள்ள ஒரு செல்போன் கடையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அங்கு சென்று அந்தக் கடைக்காரரிடம் இந்த செல்போனை யார் உங்களிடம் விற்றது? என்று காவல்துறையினர் விசாரணை செய்ததில், அந்த செல்போனை விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை கிராமத்தை சேர்ந்த காசிராஜன் மகன் மாவீரன்(34) என்பவர் செல்போனை திருடி வந்து நாகலாபுரத்தில் உள்ள செல்போன் கடையில் வந்து விற்றது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து மாவீரனை கைது செய்து போலீசார் விசாரித்ததில், மாவீரன் மீன் பிடிக்க கடலுக்கு செல்வதோடு, குறி சொல்வது, உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு விபூதி போடுவது போன்ற செயல்களும் செய்து வந்ததுள்ளார், இதற்கு முன் மூதாட்டி குருபாக்கியத்திற்கு உடல்நிலை சரியில்லாமல் போன சமயத்தில் மாவீரன் திருநீறு போட்டு சரி செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் மூதாட்டி குருபாக்கியத்திற்கு திருநீர் போட வந்த போது வீட்டை நோட்டமிட்டு செல்போனை திருடியதாக மாவீரன் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் மாவீரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைத்தனர்.