"LONG JUMP, HIGH JUMP-லாம் தெரிஞ்சாதான் வீட்டுக்கே போக முடியும்" : இருக்கிற பைப்லயே தண்ணியைக் காணோம்... இதுல புதுசா ஒன்னு எதுக்கு? : விளாத்திகுளம் மக்களுக்கு பெரும் தொந்தரவாக இருந்துவரும் பைப் லைன் பொருத்தும் பணி!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி பகுதிகளில் கடந்த சில தினங்களாக அம்ருத் திட்டத்தின் கீழ் பைப்லைன் பொருத்தும் பணிகள் முறையான திட்டமிடல் இன்றி பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு விளாத்திகுளம் பேரூராச்சிக்குட்பட்ட ஒவ்வொரு தெருகளிலும் சாலையின் நடுவில் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு சாலையை பெயர்த்தெடுத்து பைப்லைன் பொருத்தம் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருதால் அந்தந்த பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் சாலையை கடந்து செல்வதல் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இதிலும் குறிப்பாக தற்போது விளாத்திகுளம் பேரூராட்சியின் பங்களாத்தெரு பகுதியில் சாலையை முற்றிலுமாக பெயர்த்தெடுத்து பைப்லைன் பொருத்துவதற்காக குழிகளைத் தோண்டி அப்படியே போட்டு வைத்துள்ளனர். இதனால் நடப்பதற்கு முடியாத வகையில் இருக்கும் இந்த சாலையில் LONG JUMP, HIGH JUMP செய்துதான் தங்களது வீடுகளுக்கே போகவேண்டிய அசாதாரணமான சூழ்நிலை இருப்பதாக அப்பகுதிவாசிகள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர். மேலும் நேற்று பெய்த மழை காரணமாக மழை நீரும் கால்வாய் நீரும் சேர்ந்து தேங்கியிருந்ததில் அப்பகுதிவாசிகள் 10க்கும் மேற்பட்டோர் விழுந்து விபத்துக்குள்ள உள்ளதாகவும் கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி, "ஏற்கனவே தெருக்குடிநீர் குழாய்கள் மற்றும் சீவலப்பேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் குழாய்கள் என ஒரு தெருவிற்கு ஏராளமான பைப்புகள் இருக்கும்பட்சத்தில்... இருக்கின்ற குழாயிலேயே தண்ணி ஒழுங்கா வர மாட்டேங்குது... இதுல புதுசா ஒன்னு எதுக்கு?, இது முற்றிலும் தேவையில்லாத திட்டம்" -என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிப்பதோடு, இவ்வாறு பொதுமக்களுக்கு மிகவும் இடையூறு ஏற்படும் வகையில் பைப் லைன் அமைக்கும் பணிகளை கையாண்டு வரும் ஒப்பந்ததாரர் மீதும், முறையான மேற்பார்வை செய்யாத செயல் அலுவலர் மகேஸ்வரன்மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ் ஆகியோர் மீதும் தமிழ்நாடு பேரூராட்சிகள் இயக்குநர் கிரண் குராலா IAS நடவடிக்கை மேற்கொண்டு, விளாத்திகுளம் பேரூராட்சியில் ஆமை வேகத்தில் நடைபெற்றும் இப்பணிகளை விரைந்து முடித்து ஜேசிபி இயந்திரத்தால் தோண்டப்பட்ட இச்சாலைகளை மழைக்காலம் வருவதற்கு முன்பாக போர்க்கால அடிப்படையில் விரைந்து சீரமைத்து மக்கள் பாதுகாப்பாக சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.