சித்தாடை கட்டிக்கிட்டு,சிங்காரம் பண்ணிக்கிட்டு வாசிங்க பெண்கள் ஆடட்டும்  - நாதஸ்வர கலைஞரிடம் அன்பாய் கேட்ட அமைச்சர் கீதா ஜீவன்!

துணை முதல்வர் வரவேற்பில் நடந்த சுவாரஸ்யம்-குத்தாட்டம் போட்டு கலக்கிய பெண்கள்!

தூத்துக்குடியில்  நாளை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வர் முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரை வந்தார். பின்னர் அங்கிருந்து  சாலை மார்க்கமாக தூத்துக்குடிக்கு சென்ற   தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரத்தில்  தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தமிழக சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் மேளம் தாளம் முழங்க ஆயிரக்கணக்கான திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் சாலையின்  இருபுறங்களிலும் நின்று வரவேற்பு அளித்தனர். தொண்டர்களின் வரவேற்பினை ஏற்றுக்கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொண்டர்களுக்கு கை கொடுத்தவாறு சென்றார்.  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் துணை முதல்வர் வரவேற்பினை முன்னிட்டு நாதஸ்வரம்  வாசிக்க மற்றும் மேளம் அடிக்க சில பெண்கள் ஆடிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த அமைச்சர் கீதா ஜீவன் சித்தாடை கட்டிக்கிட்டு

சிங்காரம் பண்ணிக்கிட்டு* - வாசிங்க பெண்கள் ஆடட்டும் என்று நாதஸ்வர கலைஞரிடம் கேட்டுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து அந்தப் பாடலை நாதஸ்வரக் கலைஞர் வாசிக்க பெண்கள் இசைக்கேற்ப குத்தாட்டம் போட்டனர். இதனை அமைச்சர் கீதா ஜீவன், எம் எல் ஏ மார்க்கண்டேயன், பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி  சங்கரநாராயணன்  ஆகியோர் கண்டு ரசித்தனர். அப்போது நாதஸ்வரம் பெண்கள் ஆடுவதற்கு அமைச்சரை அழைத்தனர். நீங்கள் ஆடுங்கள் ரசிக்கிறேன் என்று கூறி மறுத்துவிட்டார்.