விளாத்திகுளம் பகுதியில் உலா வரும் சிறுத்தை:பொதுமக்கள் அச்சம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ரெகுராமபுரம் காட்டுப்பகுதியில் இன்று 02-12-2025 நண்பகல் ஒரு சிறுத்தை ஒன்று நடமாடியாதாக அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் சங்கலிங்கபுரம் காவல் நிலையத்திற்கும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார், தகவலின் பேரில் காவல்துறையினருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர், சிறுத்தையின் கால் தடம் ஏதும் உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டனர், சிறுத்தை வந்து போனதற்கான எந்த அறிகுறி இல்லை என்பதையும், இப்பகுதியில் சிறுத்தைகள் வாழ்வதற்கு ஏற்ற சாத்தியக்கூறுகள் இல்லை என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வனத்துறையினர் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இல்லை என்று கூறினாலும்,புதூர் மற்றும் நாகலாபுரம்,மேலக்கரந்தை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் காட்டுப்பகுதிகளில் விவசாய பணி மேற்கொள்வதற்கு அச்சத்துடனே தற்போது உள்ளனர். ஏனென்றால் கடந்த 7 ஆண்டுகளாக புதூர்,நாகலாபுரம், மேலக்கரந்தை, எட்டையாபுரம், விளாத்திகுளம்,காடல்குடி உள்ளிட்ட பகுதிகளில் காற்றுபன்றிகளால் விவசாயம் முற்றிலும் சேதம் அடைந்து விவசாயிகள் வருடம் தோறும் பெரும்இழப்பையும், பன்றிகளால் தாக்கப்பட்டு காயமடைவதையும் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.
வனத்துறவினர் கடந்த 7 ஆண்டுகளாக அது காட்டுப்பன்றியா? இல்லை வீட்டுப்பன்றியா என்பது குறித்து தொடர்ந்து ஆராய்ந்து மட்டுமே வருகின்றனரே தவிர, காட்டுப்பன்றி என்றால்சேதம் அடைந்த விவசாய பயிர்களுக்கு இழப்பீடுத்தொகை வாங்கித் தருவதும் இல்லை, வீட்டுப் பன்றி என்றால் அதைக் கட்டுப்படுத்துவதற்கான எந்த வழிகளையும் முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளையும் விவசாயிகள் முன்வைத்து வருகின்றனர்.
அதேபோல் காடல்குடி,புதூர்,மேலக்கரந்தை உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து மர்மநபர்கள் முயல் மற்றும் மயில்களை வேட்டை ஆடுவதும் தொடர்கதையாகி வருகிறது,வனத்துறை அதிகாரிகள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்டோர் முறையாக விளாத்திகுளம் சுற்றுவட்டார காட்டுப்பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வதில்லை என்ற குற்றசாட்டுகளை விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர்.