விளாத்திகுளம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.90 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட வெளிப்புற நோயாளிகள் கட்டிடத்தை திறந்து வைத்த கனிமொழி எம்.பி.!




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குளத்தூரில் அமைந்துள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ.90 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள வெளிநோயாளிகள் பிரிவு கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டுள்ள வெளிப்புற நோயாளிகள் கட்டிடத்தில் அமைந்துள்ள வசதிகளை பார்வையிட்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மக்களைத்தேடி மருத்துவ மருந்து பெட்டகத்தையும் வழங்கி உடல்நலம் பற்றி கேட்டறிந்தார். 

இந்நிகழ்ச்சியில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், கோட்டாட்சியர் மகாலட்சுமி, வட்டாட்சியர், மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். அதேபோன்று குளத்தூர் மற்றும்  பூசனூர் ஊராட்சி வடமலை சமுத்திரம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பயணிகள் நிழற்குடையையும் ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.