எட்டையபுரம் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்த கனிமொழி எம்.பி.!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே எட்டயபுரத்தில் ரூ.12 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிட திறப்பு விழா இன்று எட்டையபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் தலைமையில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த கனிமொழி எம்.பி., அங்கிருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டு இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து எட்டயபுரம் காவல் நிலையம் எதிரே புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிழற்குடையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.