சாலை விபத்தில் உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்திற்கு கபடி குழுவினர் ரூ.1 லட்சம் நிதியுதவி : கபடி வீரர் மணத்தி கணேசன் நேரில் சென்று ஆறுதல்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மேல்மாந்தை செவல் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி - தாயம்மாள் தம்பதியினரின் மகனும், சிறந்த கபடி வீரரான தருண் தாஸ்(21) என்பவர் 2-ம் ஆண்டு கல்லூரி படிப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2023 டிசம்பர் மாதம் 31-ம் தேதியன்று தென்காசியில் நடைபெற்ற கபடிப் போட்டிக்குச் சென்று விளையாடிவிட்டு தனது ஊருக்கு சென்று கொண்டிருந்த போது தெற்கு கல்மேடு அருகில் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அச்சம்பவம் தருணின் பெற்றோர்கள் மற்றும் சக கபடி வீரர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து கபடி வீரர் தருண்தாஸ் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், "எங்க ஏரியா ஒரு ஊர் கபடி" கழகத்தின் விளையாட்டு வீரர்கள் சார்பில், வறுமையில் வாடும் கபடி வீரர் தருணின் குடும்பத்திற்காக ஏராளமான கபடி வீரர்களிடமிருந்து நிதி திரட்டி முதற்கட்டமாக ரூ.1 லட்சம் பணத்தை அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன் மூலம் வழங்கி விபத்தில் உயிரிழந்த கபடி வீரர் தருண்தாஸின் தாயிடம் ஆறுதல் கூறிச் சென்றனர்.