விவசாயிகளுக்கான தனிநபர் அடையாள அட்டை நில உடைமைகளை பதிவு செய்ய அழைப்பு !


வேளாண் அடுக்கு திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நில விவரங்கள் இணைய வழியில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகத் துறை ஆகிய துறைகளைச் சார்ந்த கள அலுவலர்கள் மற்றும் மகளிர் திட்ட சமுதாய பயிற்றுநர்கள், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் மற்றும் பொது இ - சேவை மையங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.


இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்தில் 10890 விவசாயிகளில் இதுவரை 5600 விவசாயிகளின் நில விவரங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டள்ளது. இந்த திட்டத்தில் விவசாயிகள் தங்களின் நில விவரங்களை இணைய வழியில் கட்டணமின்றி பதிவு செய்யலாம். பதிவு செய்வதற்கு தங்களின் விவசாய நில பட்டா, ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி ஆகியவற்றை தங்கள் வருவாய் கிராமத்தில் பதிவு செய்துகொண்டிருக்கும் களப் பணியாளர்களிடம் கொண்டுசென்று பதிவு செய்துகொள்ளலாம்.


வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த பிற துறைகளால் செயல்படுத்தப்படும் அனைத்து மத்திய, மாநில அரசு திட்டங்கள், பிரதமரின்கவுரவ ஊக்கத் தொகை, பயிர் காப்பீட்டுத் தொகை, பயிர் கடன், வெள்ள நிவாரணம் மற்றும் வறட்சி நிவாரணம் போன்ற திட்டங்கள் இந்த பதிவுகளின் அடிப்படையிலேயே இனிவரும் காலங்களில் வழங்கப்படவுள்ளது.


எனவே விளாத்திகுளம் வட்டார விவசாயிகள் அனைவரும் தங்களின் நில விவரங்களை இணைய வழியில் பதிவு செய்து தனிநபர் அடையாள அட்டை பெற்று பயன்பெற வேண்டும் என விளாத்திகுளம் வேளாண்மை உதவி இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.