தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சிதம்பர் நகர் பகுதியைச் சேர்ந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணன் என்பவர் தனது வீட்டின் அருகில் உள்ள பொதுப் பாதையை ஆக்கிரமித்து இருப்பதாகவும், அதனை அகற்றித் தர வேண்டும் என்றும் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணன் இந்தப் பாதை பிரச்சினையினால் இந்து - கிறிஸ்தவ மதப் பிரச்சினையை தூண்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு வைத்து உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுத்து பாதை ஆக்கிரமிப்பை மீட்டு தர வேண்டும் என்று சிதம்பர நகர் போதையை சேர்ந்த மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வட்டாட்சியர் இராமகிருஷ்ணன், இன்று மாலை 3 மணிக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் எதிர்த்தரப்பினரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்படும் எனக் கூறிச்சென்றார். இருப்பினும் மக்கள் வீட்டிற்கு செல்லாமலும், மதிய சாப்பிடாமலும் தங்களுக்கு தீர்வு வேண்டும் என்று கூறி வட்டாட்சியர் அலுவலகத்திலேயே காத்திருந்தனர். இருந்தபோதிலும் மாலை 3 மணிக்கு நடைபெற வேண்டிய பேச்சுவார்த்தை கூட்டம் சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணன் மற்றும் எதிர் தரப்பினர் வராத காரணத்தால் இழுபறியானது... இதனால் ஆத்திரமடைந்த சிதம்பரம் நகர் பகுதி மக்கள் கொட்டும் மழையிலும் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி, கல்லூரி வாகனங்கள் முதல் அரசு பேருந்து வரை அனைத்தும் வாகனங்களின் போக்குவரத்தும் சுமார் 25 நிமிடங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்டது. பொது மக்களின் சாலை மறியல் காரணமாக காவல்துறையினர் சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணனை தொடர்பு கொண்டு விரைந்து வரச் செய்தனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தை கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்திற்கு சீருடையிலியே வந்திருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணனை, "உங்கள் மீதான புகாருக்கு பேச அழைத்தால் சொன்ன நேரத்திற்கு வர மாட்டீர்களா..?" என வார்த்தைகளால் விளாசினார். அத்தோடு, கூட்டத்திற்கு வருகை தர வேண்டுமென்று எதிர் தரப்பினருக்கு அளித்த சமனையும் முறையாக வழங்கச் செல்லாத விளாத்திகுளம் உதவி ஆய்வாளர்கள் முருகன் மற்றும் முருகேசன் ஆகிய இருவரையும் பார்த்து... "லேசாக முடிய வேண்டிய பிரச்சனையை மறியல், ஆர்ப்பாட்டம் அளவிற்கு‌ விட்டிருக்கீங்க.., சம்மன் கொடுத்தா தலையாரிதான் போகனுமா கூட போக மாட்டீங்களா" என்று வட்டாட்சியர் இராமகிருஷ்ணன் கடுமையாக கண்டித்து மேல் இடத்தில் புகார் செய்துவிடுவதாக எச்சரித்தார். பின் உடனடியாக கூட்டத்திலிருந்து சென்ற விளாத்திகுளம் உதவி ஆய்வாளர் முருகேசன் எதிர்தரப்பினரை  அலுவலகத்திற்கு அழைத்து வந்தார்.

இதைத்தொடர்ந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்திய விளாத்திகுளம் வட்டாட்சியர் இராமகிருஷ்ணன், சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணன் தனது வீட்டின் அருகில் ஆக்கிரமிப்பு செய்துள்ள பாதையை அவரது பட்டாவில் இருந்து ரத்து செய்வதாக உத்தரவிட்டு, அதனை உடனடியாக கோட்டாட்சியருக்கு அனுப்பி ஒரு வார காலத்திற்குள்(ஜனவரி 19-ம் தேதிக்குள்) ஆணையாக பிறப்பிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.