விளாத்திகுளத்தில், வெள்ளத்தில் சிக்கிய முதியவரை 1 மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள் - பாராட்டு தெரிவித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வைப்பாற்றில் கீழ் பாலத்திற்கு மேல் வெள்ளம் கரைபுரண்டு பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் இன்று இரவு மல்வநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்ற 65 வயது முதியவர் தண்ணீர் வேகமாக பெருக்கெடுத்து ஓடக்கூடிய நிலையில் அஜாக்கிரதையாக வெள்ளத்தை கடந்து செல்ல முயன்ற போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இதனையடுத்து உடனடியாக விளாத்திகுளம் காவல் துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் அங்கு உடனடியாக விரைந்து சென்ற போலீசார் மற்றும் விளாத்திகுளம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மு. சங்கரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் முதியவரை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தால் வெள்ளத்தில் சிக்கிய முதியவர் கோபாலை மீட்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இருந்தாலும் தீயணைப்பு வீரர்கள் விளாத்திகுளம் மேம்பாலத்தில் இருந்து கயிற்றைக் கட்டிக்கொண்டு வெள்ளம் சீறிப்பாயும் வைப்பாற்றில் இறங்கி முதியவரின் உடலில் கயிற்றைக்கட்டி மேலே தூக்கி 1 மணிநேர தீவிர முயற்சிக்குப்பின் பத்திரமாக மீட்டனர். பின்னர்  அங்கு வந்திருந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவப் பணியாளர் முதியவர் உடலை பரிசோதனை செய்து அவரை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.


மேலும், இரவில் தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் பெரும் சிரமப்பட்டு வெள்ளத்தில் சிக்கிய முதியவர் கோபாலை பத்திரமாக மீட்ட சம்பவத்தை அறிந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் விளாத்திகுளம் காவல் துறை மற்றும் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்..