விளாத்திகுளத்தில், கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு சொக்கப்பனைக் கொளுத்தும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது!




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 400 ஆண்டு பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு இன்று மாலை ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து விளக்கேற்றி வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி முன்னிட்டு கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து அலங்கார தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து சுவாமி அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலாவாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

தொடர்ந்து... விளாத்திகுளம் வேம்பார் ரோட்டில், பனை மரம் மற்றும் பனை ஓலைகளால் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து காய்கறி மார்க்கெட், மதுரை ரோடு வழியாக நகர்வலம் வந்த சுவாமி  ஊர்வலம் கோவிலின் கிழக்கு வாசல் பகுதியை வந்தடைந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த இரண்டாவது சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது இதில் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த  ஏராளமான பொதுமக்கள் கலந்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வை பக்திபரவசத்தோடு கண்டுகளித்தனர்.