விளாத்திகுளத்தில், மழை காரணமாக 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிப்பு ; வியாபாரிகள், பொது மக்கள் கடும் அவதி...!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், புதூர், நாகலாபுரம், குளத்தூர்,சூரங்குடி, வேம்பார்,எட்டயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் பெய்து தொடர் மழை பெய்து வருகிறது, இதன் காரணமாக, விவசாய பணிக்கு செல்வோர்,கட்டிட வேலைக்கு செல்வோர் உள்ளிட்ட தினகூலிவேலைக்கு செல்பவர்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்க பட்டுள்ளது.
அதிகாலை முதலே செய்து வரும் தொடர்மழை காரணமாக சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக விளாத்திகுளம் பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் விளாத்திகுளம் பகுதியில் மின்சாரம் இல்லாத காரணத்தினால் உணவகங்கள், தொழில் நிறுவனங்கள் முடங்கியதோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுபோன்று மழை காரணமாக டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து அடிக்கடி மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். ஆகையால், இனி வரும் மழைக்காலங்களிலாவது இதுபோன்ற மின் துண்டிப்பை தவிர்க்க விளாத்திகுளம் மின்வாரிய அதிகாரிகள் டிரான்ஸ்பார்மர்களை உரிய ஆய்வு மேற்கொண்டு இதுபோன்று மின் துண்டிப்பு ஏற்படாத வகையில் உரிய பராமரிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அத்தோடு உடனடியாக மின் பழுதுகளை சரிசெய்யும் வகையில் விளாத்திகுளம் பகுதிக்கு போதுமான மின்வாரிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.