விளாத்திகுளத்தில், "சித்திரை திருவிழாவை முன்னிட்டு நள்ளிரவில் தீப்பந்தம் ஒளியில் நடைபெற்ற  கழுவேற்றம்" : சமணர்களை கழுவேறிய லீலையை கண்ணிமைக்காமல் கண்ட பொதுமக்கள்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் சித்திரை திருவிழாவின் 6-ம் திருநாளை முன்னிட்டு நள்ளிரவில் தீப்பந்தம் வெளிச்சத்தில் பிரமிப்பூட்டும் வகையில் நடைபெற்ற "கழுவேற்றம்" நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தத்ரூபமாக நிகழ்ந்த சமணர்களை கழுவேற்றம் செய்த நிகழ்வினை கண்ணிமைக்காமல் பார்த்து மிரண்டனர்.

முன் காலத்தில் சமணர்களுக்கும் - நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசருக்கும் நடைபெற்ற போட்டியில் தோல்வியுற்று சைவ சமயத்தை தழுவ மறுத்த காரணத்திற்காக பாண்டிய மன்னனான கூன் பாண்டியன் 8000 சமணர்களை கழுவேற்றம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. பாண்டிய மன்னர் காலத்தில் மரண தண்டனை விதிக்கும் பொருட்டு நிகழ்த்தப்பட்ட இந்த கழுவேற்றம் நிகழ்வினை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு "சமணர்களை கழுவேற்றும் லீலை" நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழாவானது கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சித்திரை திருவிழாவின் 6-ம் திருநாளான இன்று

நள்ளிரவில் விளாத்திகுளம் கீழரதவீதியில் ஏராளமான பொதுமக்கள் முன்னிலையில் தீப்பந்தம் வெளிச்சத்தில் திகிலூட்டும் விதமாக கழுவேற்றம் நடைபெற்றது.. இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்த சுவாமி அம்பாளுக்கு அலங்கார தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.