விளாத்திகுளம் அருகே வேம்பாரில், 7 வயது சிறுவனை கொடூரமாக குத்திக்கொலை செய்த காமக்கொடூரனை போக்சோ & கொலை வழக்கில் கைது செய்து சிறையிலடைத்த போலீசார் : பகீர் பிண்ணனி!
விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பாரில் 2-வகுப்பு பயின்று வந்த 7 வயது சிறுவன் அஸ்வின் குமார் வீட்டில் தனியாக இருந்த போது பாலியல் ரீதியாக துன்புறுத்தி கத்தியால் குத்திக் கொலை செய்த காமக்கொடூரனான அதே பகுதியைச் சேர்ந்த தாமஸ் அற்புத ரகசியம்(19) என்பவனை போலீசார் கைது செய்து IPC 452, 302 மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 5(I) r/w 6 & 11(v),12 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஓட்டப்பிடாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பேராவூரணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பாரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் என 3 குழந்தைகளும் உள்ளனர். இவரது கடைசி மகனான அஸ்வின் குமார்(7) வேம்பாரில் உள்ள இந்து நாடார் பள்ளியில் 2-ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) கடந்த 10-ம் தேதியன்று காய்ச்சல் காரணமாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். வழக்கம்போல அன்றும் அஸ்வின் குமாரின் தந்தை முத்துக்குமார் அதிகாலையிலேயே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அதே போல அஸ்வின் உடன்பிறந்தவர்களை காலை 9 மணியளவில் அவரது தாய் சாந்தி பள்ளிக்கு அழைத்துச் சென்ற நிலையில்.... வேம்பார் கடல் காவல் நிலையத்திற்கு எதிரில் உள்ள இவர்களது வீட்டில் அஸ்வின் குமார் மட்டும் தனியாக இருந்துள்ளார். பின்னர் தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்த தாய் சாந்தி, தங்கள் வீட்டு வாசலில் தனது மகன் அஸ்வின் குமார், வலதுபக்க கழுத்தில் பலத்த காயத்துடன் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார். பின் அப்பகுதி மக்கள் இதுபற்றி சூரங்குடி காவல் நிலைய போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உடனடியாக அங்கு விரைந்து சென்று 8 வயது சிறுவன் அஸ்வினின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைத்து கொலை செய்தது யார்? என்று குற்றவாளியை தேடும் பணியில் விளாத்திகுளம் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பெருமாள் தலைமையிலான போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
மேலும், வேம்பாரில் குடியிருப்பு பகுதிகளிலிருந்து சற்று தொலைவில் தன்னந்தனியாக கடற்கரையையொட்டி இவர்களது வீடு அமைந்த காரணத்தால் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி என்பதால் இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் சேகரிப்பதில் போலீசாருக்கு சற்று சிரமம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி, வேம்பார் கடல் காவல் நிலையத்திற்கு நேரெதிராக இந்த கொலைச் சம்பவம் நடந்திருந்தும் கடல் காவல் நிலையத்தில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படாததன் காரணமாக குற்றவாளியை கண்டுபிடிப்பதில் தாமதமானது என்றே கூறலாம்... அதிலும், இச்சம்பவத்தில் கடல் காவல் நிலையம் முன்பே சிறுவன் கொலையா? போலீசார் யாரும் இல்லையா? என்று பொதுமக்கள் மத்தியில் பெரும் பேசும் பொருளாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது
இந்த நிலையில், அப்பகுதியில் போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில்.... கொடூரமாக கொலை குத்திக்கொலை செய்யப்பட்ட அஸ்வின் குமாரின் வீட்டின் அருகில் உள்ள கடலோரப் பகுதியில் அதே வேம்பாரைச் சேர்ந்த அந்தோணி ராபர்ட் கென்னடி என்பவரின் மகனான தாமஸ் அற்புத ரகசியம் என்பவன் சுற்றித்திரிந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து உடனடியாக அதே பகுதியில் பதுங்கியிருந்த தாமஸ் அற்புத ரகசியம் என்ற 19 வயது இளைஞனை போலீசார் தேடிப்பிடித்து சந்தேகத்தின் பேரில் சூரங்குடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து தனியாக இருந்த 8 வயது சிறுவன் அஸ்வின் குமாரை பாலியல் இச்சைக் காரணமாக வன்புணர்வு செய்ய முயன்றபோது சிறுவன் அஸ்வின் சத்தமிட்டதால் அங்கிருந்த கத்தியால் கழுத்தில் குத்திவிட்டு தப்பியோடியதாக காமக்கொடூரனான தாமஸ் அற்புத ரகசியம் வாக்குமூலம் அளித்துள்ளான்.
இதைத்தொடர்ந்து போலீசார் குற்றவாளியான தாமஸை கைது செய்து இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 452, 302 மற்றும் போக்சோ சட்டம் பிரிவு 5(I) r/w 6 & 11(v), 12 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஓட்டப்பிடாரம் குற்றவியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் தூத்துக்குடி பேராவூரணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
(உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் தனியாக இருந்த சிறுவன் அஸ்வின் குமார் பாலியல் இச்சைக் காரணமாக கொடூரமாக தாக்கிக்கொல்லப்பட்ட இச்சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது)