தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவிற்குட்பட்ட மந்திக்குளம் கிராம புல எண்கள்: 229/2, 228, 227/5, 222/2, 176/5, 175/4 -உள்ளிட்டவற்றில் நில அளவீடு செய்ய வேண்டும் என்று விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மனு செய்துள்ளதாகக்கூறி, விளாத்திகுளம் வட்ட துணை ஆய்வாளர் மேற்காணும் புல எண்கள் கொண்ட நில உரிமையாளர்கள் சுமார் 47 பேருக்கு 15.09.2023 (வெள்ளிக்கிழமையன்று) உரிய ஆவணங்களுடன் வருவாய்த்துறையினரால் மேற்கொள்ளப்படும் நில அளவீட்டிற்கு வருகை தர வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நிலத்தின் உரிமையாளர்கள், தங்களது நிலங்களை நிலத்திற்கு தொடர்பில்லாத தனிநபர்(சட்டமன்ற உறுப்பினர்) அளித்த மனுவின் படி அளவீடு செய்யக்கூடாது என்று விளாத்திகுளம் வட்டாட்சியருக்கு ஆட்சேபணை மனு அளித்துள்ளனர். அதுமட்டுமின்றி, சோலையம்மாள் என்பவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், கோவில்பட்டி கோட்டாட்சியர், விளாத்திகுளம் வட்டாச்சியர் ஆகியோருக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தங்களது விருப்பமின்றி சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தூண்டுதலின் பேரில், நில அளவீடு செய்யக்கூடாது என்று பொதுநல வழக்கு (WP(MD).22687/2023) ஒன்றை தொடர்ந்துள்ளார். இந்த நிலையில், விளாத்திகுளம் வட்டத் துணை ஆய்வாளர் வழங்கியிருந்த நோட்டீஸின்படி, 15.09.2023 காலை 9:30 மணியளவில் வருவாய்த் துறையினர் நில அளவீடு பணியை மேற்கொள்ள சென்றபோது அப்புல எண்களுக்கு சொந்தமான நில உரிமையாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் விவசாய நிலத்துக்கு முன்பாக அமர்ந்து தங்களத்தை அளவீடு செய்யக்கூடாது எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். 
பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்த விளாத்திகுளம் பொறுப்பு காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, நீண்ட நேரமாக தனது காரில் இருந்து இறங்காமல்.... ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு நில உரிமையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கூறுவதை காதுகொடுத்து கேட்காமல், அவர்களை மிரட்டும் தொனியில் ஒருமையில் பேசி, இங்கிருந்து போகச்சொல்லியது அங்கிருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோபத்தை அதிகப்படுத்துவது போலவே அமைந்தது... பாதுகாப்பு மட்டுமே அளிக்க வந்திருந்த பெண் ஆய்வாளர் விஜயலட்சுமியிடம், அங்கிருந்த வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது, தற்போது சட்டத்தை மீறி நில அளவீடு செய்யக்கூடாது என்று எவ்வளவு தான் புரிய வைத்தும் அதை சற்றும் பொருட்படுத்தாத ஆய்வாளர் விஜயலட்சுமி வழக்கறிஞர்களையும் ஒருமையில் அவதூறாக பேசி விரட்டினார். இதனால் ஆய்வாளர் விஜயலட்சுமிக்கும் - பொதுமக்கள் &வழக்கறிஞர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து நில அளவீடு செய்யும் பணிகள் தற்சமயமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எவ்வளவோ மக்கள் பிரச்சனை இருக்கும் போது விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், காற்றாலை நிறுவனத்தின் கனரக வாகனங்கள் சென்று வர விவசாய நிலங்கள் வழியாக பாதை வேண்டும் என்பதற்காக... தனது அதிகாரத்தையும் மீறி சில தனி நபர்களின் நிலங்களை அளவீடு செய்ய மனு அளித்திருப்பதும், வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவைக்காக பணம் (chellan) கட்டி பல நாட்களாக காத்துக்கிடக்கும் பொது மக்களுக்கு மத்தியில்.... சட்டமன்ற உறுப்பினர் கூறியுள்ளார் என்ற ஒரே காரணத்திற்காக 47 தனி நபர்களின் நிலங்களை அளவீடு செய்ய வருவாய்த்துறை பெருமுனைப்போடு செயல்பட்டு வருவது தனியார் காற்றாலையின் கனரக வாகனங்கள் சென்று வர பாதை அமைத்துக் கொடுப்பதில் எம்.எல்.ஏ-வும், வட்டாட்சியரும் எவ்வளவு ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பது தெளிவாக புலப்படுகின்றது...!
தன் சட்டமன்றத் தொகுதி மக்களின் நலனுக்காக போராட வேண்டிய சட்டமன்ற உறுப்பினரும், மக்களின் பாதுகாப்பிற்காக துணை நிற்க வேண்டிய காவல் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் சில தனியார் நிறுவனங்களின் நலனுக்காக மக்களை தொடர்ந்து வஞ்சிப்பது மிகவும் வேதனையான செயலாக பார்க்கப்படுகிறது.... இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோர் தலையிட்டு தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக பொதுமக்களை வஞ்சிக்கும் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.