"விளாத்திகுளம் அருகே ECR சாலையை உடனடியாக சீரமைக்காவிட்டால் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம்" - அதிமுக EX.MLA சின்னப்பன் எச்சரிக்கை! 






தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த தொடர் கனமழை காரணமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் மிக நீண்ட தூரம் கொண்ட கிழக்கு கடற்கரை சாலையில்(ECR) தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அமைந்துள்ள வேப்பிலோடையில் அதிவேகத்தில் கரைபுரண்டோடிய காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக ECR சாலை இருந்த தடமே தெரியாமல் அடித்துச் சென்றதில், கிட்டத்தட்ட 300 மீட்டர் அளவிலான சாலை அப்பளம் போல சிறுசிறு துண்டுகளாக நொறுங்கியது. அதுமட்டுமின்றி, தற்போது வேம்பார் முதல் மேல அரசடி வரை சுமார் 46 கிலோ மீட்டர் ECR முறையான பராமரிப்பு இன்றி மிகவும் சிதலமடைந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு இடையில் இப்பகுதியை கடந்து செல்கின்றனர். மேலும், வேப்பலோடை அருகில் காட்டாற்று வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட சாலை தற்போது வரை முறையான வகையில் சீரமைக்கப்படாமல்... சீரமைக்கப்பட்டுள்ளது என்ற பெயருக்கு  ஜல்லி கற்களையும், மணலையும் கொட்டி வைத்துள்ளனர். இதனால் மிகவும் ஆபத்தாக இருக்கக்கூடிய இந்த சாலையை கடப்பது என்பது வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய சவாலாகவே தற்போது வரை இருந்து வருகிறது. இந்த மிக முக்கியமான ECR சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் வலியுறுத்தியும், ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் ஏராளமான செய்திகள் வெளிவந்தும் தற்போது வரை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியோ, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனோ எந்தவித நடவடிக்கையும் எடுத்த பாடில்லை. இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டும் பெய்த தொடர் கன மழை காரணமாக பெயருக்கு போடப்பட்டிருந்த ஜல்லிக்கற்களும், மணலும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீதமுள்ள சிறு மண் பாதை வழியாக தான் வாகனங்கள் தற்போது சென்று வருகின்றன. 


இந்நிலையில் இன்று விளாத்திகுளம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் கட்சியினருடன் வந்து மிகவும் சேதம் அடைந்துள்ள ECR சாலையை பார்வையிட்டு உடனடியாக தமிழக அரசு இந்த ECR சாலையை சீரமைக்க வேண்டும் இல்லையென்றால் மிகப்பெரிய அளவில் கட்சியினர் மற்றும் பொதுமக்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிகழ்வின் போது  விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனி சக்தி ராமச்சந்திரன், விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் N.K.பெருமாள், ஒன்றிய செயலாளர் பால்ராஜ், குளத்தூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாரிச்செல்வி பாலமுருகன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு சுரேஷ் மற்றும் கார்த்திக் ராம் உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.