விளாத்திகுளம் அருகே 500 கிடாய் & 350 சேவல் கொண்டு சமைக்கப்பட்ட மாபெரும் கறி விருந்து : 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும்  விசேஷத் திருவிழா :  நீண்ட வரிசையில் காத்திருந்து உணவருந்திய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கே. துரைச்சாமிபுரம் கிராமத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கி வரும் அருள்மிகு ஸ்ரீ மணிகட்டி மாடசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பக்தர்கள் நோயிலிருந்து விடுபட, குடும்ப பிரச்சனைகள் தீர கோவில் வளாகத்தில் மணிகளைக் கட்டி வழிபட்டு வந்தால் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்ற ஐதீகம் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. இதனால் இக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி மணிகளை கட்டி வழிபட்டு வருகின்றனர். இந்த மணிகட்டி மாடசாமி கோவிலில் தமிழ் மாதத்தின் ஒவ்வொரு கடைசி வெள்ளிக்கிழமையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். மேலும் இக்கோவிலில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புரட்டாசி மாதத்தின் கடைசி வெள்ளியன்று இக்கோவிலின் கொடை விழா மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும். அதேபோல இந்த ஆண்டிற்கான கொடை விழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதன்படி, வெள்ளிக்கிழமையான நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக கோவில் கொடை விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற சேவல்கள் மற்றும் ஆடுகளை கோவிலுக்கு நேர்த்திக் கடனாக விட்டுச் செல்கின்றனர். அந்த வகையில் இந்தாண்டு கோவிலுக்கு என விட்டுச் செல்லப்பட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் 350-க்கும் மேற்பட்ட சேவல்களை உணவாக சமைத்து சாமிக்கு படைத்த பின்னர் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் படைப்பு கறிவிருந்து அளிக்கும் வகையில், மிகச்சிறப்பான முறையில் மாபெரும் அசைவ அன்னதானம் நடைபெற்றது. இந்த அன்னதானத்தில் கலந்துகொண்டு உணவருந்த வேண்டும் என்பதற்காகவே  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மழை, வெயில் என பாராமல் நீண்ட வரிசையில் பொறுமையாக காத்திருந்து கோவிலின் சார்பில், நடைபெற்ற பொது அன்னதானத்தில் பங்கேற்று உணவருந்திச் சென்றனர். குறிப்பாக இந்த அசைவ அன்னதானத்தில் பெண்கள் யாரும் கலந்து கொள்வதில்லை, இதில் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்வர் என்பது தனிச்சிறப்பாக பார்க்கப்படுகிறது.


மேலும், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே விஷேசமாக நடைபெறும் இந்த மணிகட்டி மாடசாமி கோவில் கொடை விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காகவே சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக இக்கோவிலுக்கு படையெடுத்து வந்து பிரமாண்டமாக நடைபெறும் இந்த புரட்டாசிக் கொடை விழாவிற்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.