விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம்!
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று அரசு கலைக் கல்லூரிகளில் பணி புரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 12 மாத கால ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் தங்களது வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயிலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கௌரவ விரிவுரையாளர்கள் தங்களது கோரிக்கைகளாக...
• உடனடியாக தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
• ESI, EPF பிடித்தம் செய்து பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.
• கௌரவ விரிவுரையாளர்களுக்கு UGC நிர்ணயித்த ரூ.57,700 ஊதியம் வழங்க வேண்டும்.
• பெண் விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.
போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நாகலாபுரம் அரசு கலைக்கல்லூரியைச் சேர்ந்த கௌரவ விரிவுரையாளர்களும் தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கல்லூரிக்கு இன்று மிகக் குறைந்த அளவிலான மாணவர்கள் மட்டுமே வருகை தந்துள்ளனர் என்பதும், அவ்வாறு வருகை புரிந்த மாணவர்களுக்கும் இன்று கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வகுப்புகள் எதுவும் நடைபெறாமல் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது...