எட்டையாபுரம் அருகே லாரி மீது அரசு பஸ் மோதல் - அரசு பேருந்து டிரைவர் உள்பட இரண்டு பேர் பலி - 7 பேர் காயம் .
மதுரையில் இருந்து இன்று மாலை திருச்செந்தூர் நோக்கி அரசு பேருந்து 15 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. பேருந்து தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே சிந்தலக்கரை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது நெடுஞ்சாலையில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த லாரி மீது பஸ் திடீரென வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சி முன் பகுதி அப்பளமாக நொறுங்கியது. முன்பகுதியில் இருந்த பயணிகள் சிலர் மற்றும் டிரைவர் வெளியே வர முடியாமல் பரிதவித்தனர். இது குறித்து அருகில் இருந்தவர்கள் எட்டையாபுரம் காவல் நிலையம் மற்றும் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் மலையாண்டி தலைமையில் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று சிக்கிக்கொண்டிருந்த பயணிகளை மீட்டனர்.
இதில் அரசு பேருந்து டிரைவர் மதுரை மாவட்டம் பேரையூர் முத்து லிங்கபுரத்தைச் சேர்ந்த நல்லுசாமி(45), நடத்துனர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த ஜெயராமன் (47). விளாத்திகுளம் கே.சுந்தரேஸ்வரபுரத்தை சேர்ந்த கார்த்திக் (29), காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை ஆத்தனசேரி பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் (45) , மும்பை மதுங்கா பகுதியைச் சேர்ந்த மகேஷ் (33), ஏர் இந்தியா விமானத்தில் ஏர் பயலாட்டாக இருக்கும் அவரது மனைவி வினிதா(31), தூத்துக்குடியை சேர்ந்த மருத்துவர் ரேணுகாதேவி, எடப்பாடி சேர்ந்த லோகேஸ்வரன் (33) மதுரை மேலூரைச் சேர்ந்த பாண்டியன்(34) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
காயம் அடைந்த பேருந்து ஓட்டுனர் நல்லுசாமி, நடத்துனர் ஜெயராமன், கார்த்திக்,ஸ்டாலின் ஆகிய நான்கு பேரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் பேருந்து ஓட்டுநர் நல்லுசாமி சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்
இதேபோன்று மகேஷ், அவரது மனைவி வினிதா, மருத்துவர் ரேணுகாதேவி ஆகியோர் எட்டையாபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர், இந்நிலையில் மகேஷ் சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
லோகேஸ்வரன் மற்றும் பாண்டியன் ஆகிய இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து எட்டையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.