பூசனூரில் மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் : சீறிப்பாய்ந்து சென்ற காளைகள்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூர் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி, இராமநாதபுரம்,மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை,விருதுநகர்,தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. இதில் சின்னமாடு, பெரியமாடு மற்றும் பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை நீண்ட தூரம் ஏராளமான பொதுமக்கள் சாலையின் இரு புறமும் கூடி நின்று கண்டு ரசித்தனர். இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாட்டுவண்டிகள் முதலிடங்களை பிடித்தன. இதைத்தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழாக்கமிட்டியினர் பரிசுத்தொகை மற்றும் வெள்ளி மோதிரங்கள் வழங்கி கௌரவித்தனர்.