கரம்பை மண் வீட்டிற்காகவா? அல்லது விவசாயத்திற்காகவா? : வியாபார நோக்கில் மண் திருட்டு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஜமீன் செங்கல்படை கிராமத்தைச் சேர்ந்த காளப்பெருமாள் என்ற முதியவரின் வீட்டின் முன்பு அதே கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் மற்றும் அவரது மனைவி முத்து காமாட்சி(முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்) ஆகிய இருவரும் சேர்ந்து பாதையை மறித்து 15 டிராக்டர்கள் கரம்பை மண்ணை கொட்டி முதியவர்களிடம் பிரச்சனை செய்து வந்துள்ளனர். இதனால் முதியவர் காளப்பெருமாளின் மகன் காளச்சாமி என்பவர் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் தங்களது வீட்டின் முன்பாக கரம்பை மண்ணை கொட்டி வைத்து பிரச்சனை செய்தும், கொலை மிரட்டலும் விடுத்து வருதாக முன்னாள் பெண் ஊராட்சி மன்ற தலைவர் முத்து காமாட்சி மற்றும் அவரது கணவர் பாலசுப்பிரமணியம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். ஆனால் இந்த விவகாரத்தில் விளாத்திகுளம் போலீசார் முறையான நடவடிக்கை எடுக்காமல் எதிர் தரப்பினரிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு சாதகமாக கட்ட பஞ்சாயத்து செய்து வருவதாக காவல்துறை மீது குற்றச்சாட்டு வைக்கின்றனர். அதுமட்டுமன்றி விவசாய நிலத்துக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வதற்காக கன்மாயில் இருந்து கரம்பை மண்ணை எடுத்துக் கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த நிலையில், இது போன்ற சிலர் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தனது சொந்த பயன்பாட்டிற்கு கரம்பை மண்ணை எடுப்பதை அதிகாரிகள் கண்டு கொள்ளவதில்லையா? என கேள்வியும் எழுப்பி உள்ளார்.இது ஒரு புறம் இருக்க.... தற்போது விளாத்திகுளத்தில், அரசு புறம்போக்கு புல எண்: 144A-ல் பொதுப்பணித்துறை வைப்பார் வடிநிலைக் கோட்டம் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள விளாத்திகுளம் பெரிய கண்மாயிலிருந்து அனுமதிக்கப்பட்ட அளவு கரம்பை மண் மட்டும் டிராக்டர் வாகனங்களை பயன்படுத்தி அனுமதிக்கப்பட்ட விவசாய புலத்திற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்/ ஊரக வளர்ச்சி அலுவலர்/கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரின் மேற்பார்வையில் மட்டுமே மண் எடுக்க வேண்டும் என்றும், வியாபார நோக்கில் பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிபந்தனையுடன் கரம்பை மண் எடுத்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார். 

ஆனால் விளாத்திகுளம் வட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவை கொஞ்சம் கூட மதிக்காமல் விளாத்திகுளம் பெரிய கண்மாயிலிருந்து கரம்பை மண் அதிக அளவிலான டிராக்டர்கள் மூலம் வியாபார நோக்கில் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்பட்ட வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை முறையாக கண்காணிக்க வேண்டிய பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உட்பட வருவாய் துறை அதிகாரிகள் என பலரும் கண்டுகொள்ளாமல் கனிமவளத் திருட்டுக்கு துணை போவதாக சொல்லப்படுகிறது. இதனால் விவசாயத்திற்காக கரம்பை மண்ணை எடுத்து நன்முறையில் பயன்பெற வேண்டிய விவசாயிகள் ஏமாற்றம் அடைவதாகவும்.... இலாப நோக்கில் அள்ளப்படும் கரம்பை மண் திருட்டை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உடனடியாக தடுக்க வேண்டும் என்றும், அதற்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.