விளாத்திகுளத்தில் வடமாநில இளைஞரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 4  இளைஞர்கள்  கைது!


உத்திரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் (23) தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சுப்பிரமணியபுரத்தில் தங்கி,விளாத்திகுளம் எட்டையாபுரம் சாலை பஜார் பகுதியில் பானிபூரி கடை நடத்தி வருகிறார், இந்நிலையில் கடந்த ஏப்ரல் 25 ம் தேதி இரவு 11 மணி அளவில் ஆகாஷ் 120000 ரூபாய் மதிப்புள்ள செல்போனை கையில் வைத்தவாறு நடந்து சென்று கொண்டிருந்தபோது, இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் ஆகாஷின் செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதனை அடுத்து ஆகாஷ் கொடுத்த புகாரின் பேரில் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், செல்போன் பறிப்பில் ஈடுபட்ட விளாத்திகுளம் - சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த சோமு என்பவரின் மகன் அருண்குமார் (22), சாலையம் தெரு பகுதியை சேர்ந்த வரதராஜ் என்பவரின் மகன் மாடசாமி (24), மீரான்பாளையம் தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் முத்துசெல்வம் (20), சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த ஜெயப்பெருமாள் என்பவரின் மகன் முத்தீஸ்வரன் (27) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதில் முத்தீஸ்வரன் மீது ஏற்கனவே விளாத்திகளும் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.