விளாத்திகுளம் அருகே குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ளம்: MLA எட்டி கூட பார்க்கவில்லை... என கிராம மக்கள் புகார்!
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வரக்கூடிய சூழ்நிலையில் விளாத்திகுளம் அருகே உள்ள K.சுந்தரேஸ்வரபுரம் கிராமத்தில் அமைந்துள்ள கண்மாய் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டிய நிலையில், தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள கண்மாய் முழுவதுமாக நிரம்பி காணப்படுவதோடு கண்மாய் நீர் சாலைகளில் வெள்ளமாக பெருக்கெடுத்த ஓடுகிறது. அத்தோடு K. சுந்தரேஸ்வரபுரம் அருகே உள்ள வில்வமரத்துப்பட்டியில் தற்போது வரை முறையான கால்வாய் வசதி ஏற்படுத்தி தராததால் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் புகுந்த கண்மாய் நீர் வீட்டில் உள்ள உடைமைகளை நீரில் மூழ்கச் செய்துள்ளதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மேலும் மழைக்காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் இதே அவல நிலைக்கு தான் தாங்கள் தள்ளப்படுவதாகவும், கண்மாய் நீரோடு கழிவுநீரும் சேர்ந்து வீடுகளுக்குள் வருவதால் நோய் தொற்று சூழ்நிலை உண்டாவதோடு விஷச் சந்துகளினாலும் பாதிக்கப்பட்டுவருதாக வேதனை தெரிவித்தனர்.. மேலும் அருகில் உள்ள பகுதிக்கு பார்வையிட வந்த விளாத்திகுளம் MLA மார்க்கண்டேயன் தங்கள் பகுதியை வந்து எட்டி கூட பார்க்கவில்லை என அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ஆதங்கத்தோடு தெரிவித்தனர். ஆகையால் உடனடியாக தங்கள் பகுதிக்கு முறையான கால்வாய் வசதி ஏற்படுத்தி தந்து இது போன்ற மழைக்காலங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, அருகில் உள்ள விவசாய நிலங்களிலும் இந்த கண்மாய் நீர் தேங்கி பயிர்கள் அனைத்தும் மூழ்கும் நிலையில் காணப்படுகிறது.