எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து - ஆலை உரிமையாளர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு!



வெடி விபத்தில் 13 கட்டிடங்கள் - 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் முற்றிலுமாக சேதம் - ஒரு அறையில் மட்டும் தொடர்ந்து எரிந்து வரும் தீ!




வெடி விபத்து ஏற்பட்ட போது அவசரமாக வெளியேறியதால் உயிர் தப்பிய வட மாநில தொழிலாளர்கள்…





தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே கருப்பூர் கிராமத்தில் கண்ணபிரான் என்பவருக்கு சொந்தமான ஜாஸ்மின் என்ற பெயரில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு உயர்ரக பேன்சி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.இதில் நேற்று வட மாநிலத்தைச் சேர்ந்த 50 தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் பகுதி சேர்ந்த 10 தொழிலாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலையில் பலத்த வெடிச்சத்ததுடன் ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுதீ பற்றி எரிந்து உள்ளது. இதனை பார்த்த ஊழியர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடினர். இதில் சிவகாசி விருஷநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி (57) என்பவர் ஓடி வந்த போது இரும்பு கம்பி வேலிகளில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தார். 


இந்த விபத்தில் ஆலையில் இருந்த 14 கட்டிடங்களில் 13 கட்டிடங்கள் முற்றிலுமாக சேதமடைந்தன. கார், ஜீப்கள், இருசக்கர வாகனங்கள் என 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன. மேலும் வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த அறைகள், உணவு பொருட்கள், சமையல் பாத்திரங்கள் என அனைத்து வெடி விபத்தில் முற்றிலுமாக சேதமடைந்து உள்ளன.

இந்த வெடிவிபத்தில் அருகில் அமைக்கப்பட்டு இருந்த கோழி பண்ணை முற்றிலுமாக சேதமடைந்தது. மேலும் புதியதாக கட்டப்பட்ட வரும் பட்டாசு ஆலை கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. இதனிடையே தமிழக முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த கந்தசாமி குடும்பத்திற்கு  இரங்கல் தெரிவித்தது மட்டுமின்றி 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.இந்நிலையில் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு விசாரணை நடத்தி வந்த எட்டயபுரம் போலீசார் பட்டாசு ஆலை உரிமையாளர் கண்ணபிரான் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



இதற்கிடையில் வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் உள்ள ஒரு அறையில் தொடர்ந்து தீ பற்றி எரிந்து வருகிறது. அருகில் பட்டாசு தயாரிக்கும் பயன்படும் மூலப் பொருட்கள் மற்றும் கலவை செய்த மருந்துக்கள் காணப்படுகிறது. அந்த அறையில் அலுமினியம் இருப்பதால் தீ எரிந்து வருவதாகவும், அதில் தண்ணீர் பட்டால் வேகமாக தீ எரியும் என்பதால் அதனை அணைக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வெடிவிபத்து நடந்த இடத்தினை தொழிலாளர் நலத்துறை, தடயவியல் நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்க் கொண்டனர்.இதனிடையே நேற்று வெடி விபத்து ஏற்பட்ட போது , பணியில் இருந்த வட மாநில தொழிலாளர்கள் அவசர அவசரமாக உடல் முழுவதும் வெடி மருந்து துகள் படர்ந்த நிலையில் வெளியேறிய வீடியோ காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளது.