விளாத்திகுளம் அருகே பயிர் காப்பீடு மற்றும் நிவாரணத் தொகை வழங்க கோரி வேளாண்மை அலுவலகத்தை தரையில் அமர்ந்து முற்றுகையிட்ட விவசாயிகள்!



விவசாயிகளைப் பார்த்து "என்னங்கயா உங்களுக்கு என்ன பிரச்சனை" என்று கேட்ட அதிகாரிகள்: நாங்கள் எதற்கு வந்திருக்கிறோம் என்று தெரியாத அளவிற்கு தான் நீங்கள் வேலை பார்க்கிறீர்களா என்று ஆக்ரோஷமான விவசாயிகள்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், புதூர்,ஓட்டப்பிடாரம், கயத்தாறு, எட்டையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையின் காரணமாக உளுந்து, பாசி,கம்பு,சோளம், மக்காசோளம், மிளகாய்,சின்ன வெங்காயம், கொத்தமல்லி உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்தது, மழை வெள்ளப் பாதிப்புகளை அந்தந்த பகுதி வேளாண்மை, தோட்டக்கலத்துறை, வருவாய்துறையினர் ஆகியோர் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தனர். அதேபோல் விவசாயிகளும் கிராம நிர்வாக அலுவலரிடம் பட்டா சிட்டா அடங்கள் வாங்கி பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான காப்பீட்டுத் தொகையை செலுத்தினர்.


இந்நிலையில் காப்பீட்டுத் தொகை செலுத்தி 6 மாதங்கள் ஆகியும், தற்போது வரை அரசு இழப்பீடு தொகை மற்றும் காப்பீட்டுத் தொகை வழங்காததை கண்டித்து, புதூர் வட்டார பகுதி விவசாயிகள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக முறையான நோட்டீஸ் அச்சிட்டு காவல்துறையினரிடம் அனுமதி வாங்கி இன்று போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர். தெரிவித்தபடியே இன்று புதூர் பேருந்து நிலையம் முன்பு போராட்டமானது நடைபெற்றது, இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, முற்றிலும் சேதம் அடைந்த வேளாண் விவசாய பொருள்களுக்கு உடனடியாக இழப்பீடு மற்றும் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி தமிழக வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வத்தை கண்டித்தும் தமிழக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், அதனைத் தொடர்ந்து புதூர் வேளாண்மை துறை அலுவலகத்திற்கு வந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், வேளாண் துணை இயக்குனரை சந்தித்து இழப்பீடுத் தொகை எப்போது வரும் என்று கேட்க சென்றனர், ஆனால் அங்கு வேளாண்மை இணை இயக்குனர் இல்லாததால், அனைத்து விவசாயிகளும் வேளாண்மை அலுவலகத்தில் அமர்ந்து முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த அதிகாரி ஒருவர் தரையில் அமர்ந்திருந்த விவசாயிகளைப் பார்த்து "என்னங்கயா உங்களுக்கு என்ன பிரச்சனை" என்று கேட்டதால் விவசாயிகள் எங்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியாமலே இவ்வளவு பேர் இங்கு எதற்கு இருக்கீங்க, நாங்க என்ன விஷயமா வந்தோம்னு உங்களுக்கு தெரியாதா? என்று சரமாரி கேள்வி எழுப்பினர்.



இதனைத் தொடர்ந்து தோட்டக்கலை அதிகாரிகளிடம்  பேசிய விவசாயிகள், நாங்கள் நகை நட்டுகளை வைத்து தான் விவசாயம் செய்தோம், விவசாயத்தில் இந்தாண்டு பெரும் இழப்பு ஏற்பட்டது, தற்போது பணம் இல்லாமல்  கோடை உழவு செய்ய முடியாத நிலையில் உள்ளோம் குறிப்பாக மிளகாய் வத்தல் அனைத்தும் சோடை விழுந்து, ஒரு குவிண்டலுக்கு 6000 ரூபாய் மட்டும் கேட்பதால் எங்களால் பறிப்பு கூலி கூட கொடுக்க முடியாத நிலையில் உள்ளோம் என்று கூறினர். இதனை அடுத்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் இன்னும் ஒரு வாரத்தில் உங்களுக்கான இழப்பீட்ட தொகை உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனால் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர், ஒரு வாரத்திற்குள் இழப்பீடு மற்றும் காப்பீட்டுத் தொகை வழங்கவில்லை என்றால் வருகின்ற ஜூலை 9-தேதி மிகப்பெரிய சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.