விளாத்திகுளம் அருகே விவசாயிகள் சாலை மறியல் : தூத்துக்குடிக்கு வருகை தரும் முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம் அறிவிப்பு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், புதூர் மற்றும் எட்டையபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு பயிரிட்ட தோட்டக்கலை பயிர்களான வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி உள்ளிட்ட பயிர்களுக்கு தற்போது வரை 2023-2024-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை என்றும், புதூர் வட்டாரத்தில் உள்ள விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த டிசம்பர் 11-ம் தேதி ஏராளமான விவசாயிகள் புதூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது புதூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்ற டிசம்பர் 20-ம் தேதிக்குள்ளாக 2023-2024-ம் ஆண்டுகளுக்கான பயிர்க்காப்பீட்டுத் தொகை விடுவிக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கலைந்து சென்றனர். ஆனால் அதிகாரிகள் சொன்ன தேதியை கடந்தும் தற்போது வரை விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படாத காரணத்தினால் இன்றும் புதூர் பேருந்து நிலையம் முன்பு நூற்றுக்கணக்கான விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து விளாத்திகுளம் வட்டாட்சியர் மற்றும் தோட்டக்கலை துறை இணை இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தி டிசம்பர் 27ஆம் தேதிக்குள்ளாக பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என மீண்டும் விவசாயிகளுக்கு வாக்குறுதி அளித்துள்ளனர். இதனை ஏற்று விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றதோடு டிசம்பர் 27ஆம் தேதிக்குள் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்படாவிட்டால்...
தூத்துக்குடிக்கு வருகின்ற டிசம்பர் 29ஆம் தேதி வருகை தரவிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தங்களது எதிர்ப்பை காட்டும் விதமாக கருப்புக்கொடியை கையில் ஏந்தி போராட்டம் நடத்துவோம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புதூர் வியாபாரிகள் சங்கத்தினர் இன்று ஒரு நாள் கடைகளை அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.