எட்டையாபுரம் அருகே காட்டுப்பன்றிகள் தாக்கியதில்  விவசாயிகள் காயம்: விவசாயப் பொருட்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு!




தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம், விளாத்திகுளம்,புதூர்,நாகலாபுரம்,குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் இந்தாண்டு மிளகாய், கொத்தமல்லி, மக்காச்சோளம்,கம்பு, பருத்தி உள்ளிட்ட விவசாய மற்றும் சிறுதானிய வகை பயிர்களை அதிக அளவில் பயிர் செய்துள்ளனர், இந்தாண்டு போதுமான அளவில் மழை ஒருபுறம் இல்லாமல் இருக்கும் நிலையில்,தப்பித்தவறி வந்த விவசாய பொருள்களுக்கும் உரிய விலை இல்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.



இந்த நிலையில் எட்டையாபுரம் அருகே உள்ள கைலாசபுரம் கிராமத்தில் வைப்பாற்று படுகையை ஒட்டி லட்சுமி என்ற விவசாயி தனது விளைநிலத்தில் விளைவித்த கத்தரிக்காய்,தக்காளி உள்ளிட்ட  காய்கறிகளை பறிப்பதற்காக நேற்று தனது விவசாய நிலத்திற்கு சென்ற போது அங்கு கூட்டமாக இருந்த காட்டுப்பன்றிகள் லட்சுமியை கடித்துக் குதறி பயங்கரமாக தாக்கியுள்ளது, அதேபோல் அதே  கிராமத்தில் விவசாயப் பணிக்கு சென்ற மூர்த்தி என்பவரையும்  காட்டுப்பன்றிகள் கூட்டமாக சேர்ந்து தாக்கியுள்ளது.


படுகாயம் அடைந்த லட்சுமி மற்றும் மூர்த்தி ஆகியோர் இருவரும் விருதுநகர் மாவட்டம் நென்மேனி அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று தற்போது காயத்துடன் விவசாய பணி மேற்கொள்ள முடியாமல் வீட்டில் உள்ளனர்.


இதுகுறித்து விவசாயி மூர்த்தி கூறுகையில் எங்கள் கிராமத்தில் விவசாய பணி மேற்கொள்ளும் பல பேர்களை காட்டுப்பன்றிகள் தாக்கியதாகவும், இதுகுறித்து வனத்துறையினரிடம் புகார் கூறிய போது, காட்டுப் பன்றிகளை நீங்களே அடித்து விரட்டி விடுங்கள்,எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது.



காட்டுப்பன்றிகள் அச்சத்தினால் எட்டயபுரம் மற்றும் விளாத்திகுளம் பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருக்கும் மக்காச்சோளம் கம்பரிசி உள்ளிட்ட விவசாய பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே காட்டுப்பன்றிகளை அப்புறப்படுத்தி காட்டுப்பன்றிகளால் தாக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.