விளாத்திகுளம் அருகே பொன் ஏர் பூட்டும் திருவிழா- மண் மணம் மாறாமல் கொண்டாடிய விளாத்திகுளம் பகுதி விவசாயிகள்!
விவசாயிகள் நடத்திய பொன் ஏர் திருவிழாவில் பங்கேற்று பாரம்பரிய மிக்க கம்பு பயிரை விதைத்து பொன் ஏர் திருவிழாவை தொடங்கி வைத்த கோவில்பட்டி கோட்டாட்சியர்!
தமிழ் ஆண்டு பிறப்பின் முதல் மாதமான சித்திரையில் நிலத்தில் ஏர் பூட்டி, உழுது வைப்பது தமிழர்களின் பாரம்பரிய வழக்கம். அந்த ஆண்டு முழுவதும் நல்ல விளைச்சலும், அறுவடையும் இருக்க வேண்டுமென்று சூரிய பகவானிடம் வேண்டுவதே இதன் நோக்கமாகும்.
இந்தநாளில் ஏர் பூட்டுவதை பொன்னேர் உழவு என்று அழைப்பார்கள். இந்த நாளில் மட்டும் கோவில் பூசாரி கள் வந்து, பூஜைகள் செய்து உழவு ஓட்டுவதை தொடங்கி வைப்பார்கள். தமிழகத்தின் பல பகுதிகளிலும் பொன்னேர் உழவு பூட்டுவதை இன்றும் ஒரு வழக்கமாக செய்து வருகின்றனர்
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிங்கிலிபட்டி கிராமத்தில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் வளர்த்து வரும் காளை மாடுகளை வைப்பாற்றில் குளிப்பாட்டி காளையில் உடம்பில் சந்தனம் குங்குமம் பூசியும் கொம்பில் மலர்களைக் கொண்டு காளைகளை அலங்கரித்தனர் மேலும் டிராக்டர்களும் வண்ணமயமாக ஜோடிக்கப்பட்டு, கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் பொதுமக்கள் தேர்ந்தெடுத்த நிலத்தில் உழவு செய்தனர். இவ்விழாவில் கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி தனது குடும்பத்துடன் பங்கேற்று பாரம்பரிய மிக்க விதையை( கம்பு) பயிரிட்டு பொன் ஏர் திருவிழாவை தொடங்கி வைத்தார்
இவ்விழாவில் எட்டையாபுரம் தாசில்தார் சுபா, கரிசல் பூமி விவசாய சங்கத் தலைவர் வரதராஜன் மற்றும் கிராம பொது மக்கள் உள்ளிட்டோர் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.