விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு.



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள V.சுப்பையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசகம் என்பவரின் மகன் குருமூர்த்தி (35) தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இன்று அப்பகுதியைச் சேர்ந்த விவசாய பணியாளர்கள் 8 பேருடன் சேர்ந்து மிளகாய் மற்றும் வெங்காயப் பயிர்கள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெய்த கனமழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்கியதில் குருமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த விவசாய பணியாளர்கள் கனகா, வசந்தா, சென்னக்காள் ஆகிய மூன்று பெண்களும் படுகாயம் அடைந்து தற்போது அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பற்றி தகவல் அறிந்த காடல்குடி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மின்னல் தாக்கி உயிரிழந்த குருமூர்த்தியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து உயிரிழந்த குருமூர்த்தியின் குடும்பத்திற்கு  விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு புதூர் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தனஞ்செயன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.