கையில் மனுவுடன் MLA-விடம் கோபத்தை கொட்டிய முன்னாள் அரசு ஊழியர் : மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் கடும் சலசலப்பு!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக "மக்களின் முதல்வர்' எனும் சிறப்பு திட்டம் கிராம ஊராட்சிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று இன்று புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மாவில்பட்டி கிராமத்தில் 10 கிராம ஊராட்சியைச் சேர்ந்த பொது மக்கள் பல்வேறு அரசு துறை அதிகாரிகளிடம் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறும் வகையில் மாவில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எல்லப்பன் தலைமையில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் வருவாய் துறை, ஊராட்சி ஒன்றியம், மின்சார வாரியம், வேளாண்மை துறை, காவல்துறை, மருத்துவத்துறை உட்பட பல்வேறு அரசு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது  முத்துச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் அரசு ஊழியர் ஒருவர் தனது கையில் மனுவுடன் கடும் கோபத்துடன் வந்து சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனிடம், குடிநீர் இணைப்புக்காக விண்ணப்பித்து 6 மாதங்களாக தன்னை அலைக்கழிப்பதாகவும், தான் ஒரு முன்னாள் அரசு ஊழியர் இந்திய குடிமகன்தானே எனக்கு ஏன் கோரிக்கை நிறைவேற்ற மறுக்கின்றனர்.. என்று சில நிமிடங்கள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஆதங்கத்தை கொட்டினார். இதனால் மக்களின் முதல்வர் நிகழ்ச்சியை சிறிது நேரம் பெரும் சலசலப்புக்கு உள்ளானது...